முசாபர்நகர் கலவரத்தின்போது பெண் பாலியல் வன்கொடுமை: 2 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை!!
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மதக்கலவரம் ஏற்பட்டது. இந்து, இஸ்லாமிய மதத்தினருக்கு இடையே நடந்த இந்த மதக்கலவரத்தில் 62 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர். கலவரத்தின்போது புகானா பகுதியைச் சேர்ந்த 26 வயதான இஸ்லாமிய பெண், 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் 3 மாத குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து, குழந்தையை கொலை செய்துவிடுவோம் என மிரட்டி 3 பேர் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிகப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிக்கந்தர், குல்தீப், மகேஷ்வீர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். முசாபர்நகர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. பல ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கு, விசாரணை நடைபெற்று வரும்போதே குல்தீப் உயிரிழந்துவிட்டான்.
மற்ற இருவர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கும்படி முசாபர்நகர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தை அறிவுறுத்தியது. இதையடுத்து விசாரணை துரிதமாக நடைபெற்றது. வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கந்தர், மகேஷ்வீர் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்தது. அத்துடன், அவர்களுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.