அமைதி பேச்சுவார்த்தை தோல்வி- சூடானில் உள்நாட்டு போர் மீண்டும் தீவிரம்!!
ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவம்-துணை ராணுவம் இடையே உள்நாட்டு போர் மூண்டுள்ளது. இரு தரப்பினரும் துப்பாக்கி சண்டை, வான்வழி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அப்பாவி மக்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். சூடானில் தவித்த வெளிநாட்டினரை மீட்கும் நடவடிக்கைக்காக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் சண்டை தொடர்ந்தபடி இருந்தது.
சண்டையை நிறுத்தி விட்டு இருதரப்பினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. இதற்கிடையே இரு ராணுவ தளபதிகளும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டனர். இதையடுத்து சவுதி அரேபியாவில் நேற்று முன்தினம் அமைதி பேச்சு வார்த்தை தொடங்கியது. இதில் ராணுவ பிரதிநிதிகள் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் குறிப்பிடத்தக்க வகையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் சூடானில் மீண்டும் உள்நாட்டு போர் தீவிரமடைந்து உள்ளது.
தலைநகர் கார்டூமில் வான் வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இது அந்த நகரத்தை உலுக்கியது. குண்டு வீச்சு சத்தங்கள் தொடர்ந்து கேட்டதால் மக்கள் அச்ச மடைந்துள்ளனர். மத்திய கார்டூமில் உள்ள ஒரு மார்க்கெட் அருகே விமான தாக்குதல் நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் இரு தரப்பினரும் தங்களது தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளனர். அமைதி பேச்சுவார்த்தையை அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஏற்பாடு செய்தன. இது தொடர்பாக சவுதி அரேபியா தூதர் ஒருவர் கூறும்போது, பேச்சு வார்த்தை எந்த முன்னேற்றத்தையும் அளிக்கவில்லை. இரு தரப்பும் தங்களை போரில் வெல்லும் திறன் கொண்டவர்கள் என்று கருதுகிறார்கள். போரில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறார்கள் என்றார்.