;
Athirady Tamil News

வட – கிழக்கை உள்ளடக்கி பரந்துபட்ட பேச்சுக்கள் ஜனாதிபதி – தமிழரசுக்கட்சி சந்திப்பில் இணக்கம்!!

0

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கி நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கும் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி அதிகாரப்பகிர்வு விவகாரத்தைப் பொறுத்தமட்டில் கடந்தகால ஆவணங்களை ஆராய்வது குறித்தும், முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்களையும் பேச்சுவார்த்தையில் இணைத்துக்கொள்வது பற்றியும் இதன்போது பேசப்பட்டுள்ளது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடங்கலாக வட, கிழக்கு மாகாணங்களில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று செவ்வாய்கிழமை (09) பி.ப 3.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இருப்பினும் ஜனாதிபதியுடனான இச்சந்திப்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொண்டிருக்கவில்லை.

இச்சந்திப்பு தொடர்பில் கேசரியிடம் கருத்து வெளியிட்ட கட்சியின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில்,

ஜனாதிபதியுடனான செவ்வாய்கிழமை (09) சந்திப்பின்போது வியாழன் (11) மற்றும் வெள்ளிக்கிழமை (12) நடைபெறவுள்ள சந்திப்பு குறித்துப் பேசினோம். இச்சந்திப்புக்களுக்கு வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எமது எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.

அதுமாத்திரமன்றி நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் பேசவேண்டுமெனில் நாம் கிழக்கு மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்துதான் அச்சந்திப்புக்களில் பங்கேற்போம் என்றும் உறுதியாகக் கூறினோம். அதனையடுத்து 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள சந்திப்புக்களுக்கு வடக்கு, கிழக்கு ஆகிய இருமாகாணங்களையும் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுவதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார்.

அதன்படி 11 ஆம் திகதி நல்லிணக்கம் சார்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், அரசியல்கைதிகள் விவகாரம், காணிப்பிரச்சினை, பயங்கரவாதத்தடைச்சட்டம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்படும். அதேபோன்று 12 ஆம் திகதி அதிகாரப்பகிர்வு தொடர்பில் கலந்துரையாடப்படும்.

மேலும் அதிகாரப்பகிர்வு குறித்துப் பேசும்போது எந்தெந்த ஆவணங்கள் குறித்துக் கவனம்செலுத்தவேண்டும் என்று ஜனாதிபதி எம்மிடம் வினவினார். எனவே இவ்விவகாரத்துடன் தொடர்புடைய முக்கிய கடந்தகால ஆவணங்கள் தொடர்பில் நாம் எடுத்துரைத்தோம் என்று குறிப்பிட்டார்.

அதேவேளை 13 ஆம் திகதி சனிக்கிழமையன்று நடைபெறவிருந்த சந்திப்பில் வடமாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அச்சந்திப்பைப் பிற்போடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஓரே நேரத்தில் சந்திக்க இணக்கம் !!

மே மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதியோடு நடைபெறும் கூட்டத்தில் நாம் பங்குபெற்றுவோம் – இரா.சம்பந்தன் !!

தமிழ் தேசிய கட்சிகள் முன் நிபந்தனையுடன் வட கிழக்கு இணைந்த கூட்டமைப்பாகவே அரசுடனான பேச்சுக்களில் பங்கேற்க வேண்டும்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.