முன்னாள் சட்டமா அதிபர் வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவு !!
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்வதை தடுக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் ஜூன் மாதம் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சட்டமா அதிபர் தாக்கல் செய்த ரிட் மனு இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் எம்.ஏ.ஆர். மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாம் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை செய்வதற்கும் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கும் பயங்கரவாத விசாரணை பிரிவு தன்னை அழைத்துள்ளதாக மனுதாரரான முன்னாள் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
தாம் சட்டமா அதிபராக கடமையாற்றிய போது மேற்கொள்ளப்பட்ட செயலை பொலிஸாரால் விசாரிக்க முடியாது எனவும், சட்டமா அதிபரின் சிறப்புரிமை மீறப்படும் எனவும் முன்னாள் சட்டமா அதிபர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, தன்னை கைது செய்து விசாரணை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பிரதிவாதிகளுடன் கலந்தாலோசிப்பது அவசியம் எனவும் அதற்கு சுமார் ஒரு மாத கால அவகாசம் தேவை எனவும் நீதிமன்றில் முன்னிலையாகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்க தெரிவித்தார்.
மனுதாரர் கோரிக்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்காததால், மேலதிக சொலிசிட்டர் ஜெனரலின் கோரிக்கையை ஏற்று, மனுவை ஜூன் 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.