பெண் எழுத்தாளரிடம் பாலியல் துஷ்பிரயோகம்: டொனால்டு டிரம்ப் குற்றவாளி- ரூ.41 கோடி இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவு!!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது சுமார் 12 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்தனர். இதில் பெண் எழுத்தாளர் இ.ஜீன் கரோல் ஒருவர். 1990-ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் நியூயார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் உடை மாற்றும் அறையில் தன்னை டிரம்ப் பாலியல் வன்கொடுமை செய்தார் என்று குற்றம்சாட்டினார். பல ஆண்டுகளுக்கு பிறகு இதை அவர் வெளியில் கூறினார். ஆனால் ஜீன் கரோல் குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். இது தொடர்பாக ஜீன் கரோல், நியூயார்க்கில் உள்ள பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னை டிரம்ப் கற்பழித்தார் என்று குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் நியூயார்க் கோர்ட்டு நீதிபதி லூயிஸ் சுப்லான் தீர்ப்பு அளித்தார். அதில், பெண் எழுத்தாளரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததில் டிரம்ப் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
ஜூன் கரோலை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கும் அவரை அவமதிப்பு செய்ததற்கும் டிரம்ப் பொறுப் பேற்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். அதே வேளையில் டிரம்ப் தன்னை கற்பழித்ததாக ஜீன் கரோல் கூறிய குற்றச்சாட்டை நீதி பதி நிராகரித்தார். அதற்கான அடிப்படை ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்தார். ஜீன் கரோலை பாலியல் வன்கொடுமை செய்ததால் அவருக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்திய மதிப்பில் (ரூ.41 கோடி) இழப்பீடாக வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு தொடர்பாக டிரம்ப் கருத்து கூறும்போது, “ஜீன் கரோலை நான் ஒரு போதும் பாலியல் வன் கொடுமை செய்யவில்லை. அவரை எனக்கு யாரென்றே தெரியாது. இந்த தீர்ப்பு தனக்கு நேர்ந்த அவமானம் ஆகும்” என்றார். வருகிற அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதாக அறிவித்துள்ள டிரம்ப்புக்கு இந்த தீர்ப்பு பின்னடைவாக அமைந்துள்ளது.