பாஜக தலைவரின் கணவரை சரமாரியாக தாக்கிய சமாஜ்வாடி எம்.எல்.ஏ.- காவல் நிலையத்தில் பரபரப்பு !!
உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பாஜக தலைவரின் கணவரை, எதிர்கட்சியான சமாஜ்வாடி கட்சியின் எம்எல்ஏ சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமேதி மாவட்டம் கவுரிகஞ்ச் கோத்வாலி காவல் நிலையத்தில் போலீசாரின் கண்முன்னே இந்த சம்பவம் நடந்துள்ளது. சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் மற்றும் அவரது ஆதவாளர்கள், பாஜகவைச் சேர்ந்த நகராட்சி தேர்தல் வேட்பாளர் ராஷ்மி சிங்கின் கணவர் தீபக் சிங்கை கடுமையாக தாக்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த தாக்குதலை தடுக்க முடியாமல் போலீசார் திணறினர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மோதல் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் சிங் கூறுகையில், ‘நானும் எனது ஆதரவாளர்களும் காவல் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டபோது, தீபக் சிங் வந்து தகாத வார்த்தைகளால் திட்டினார். எனது ஆதரவாளர்கள் சிலரை தாக்கினார். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் பிரச்சனை ஏற்பட்டது’ என்றார்.