“ஆட்டம் காணும் பாகிஸ்தான் பொருளாதாரம்..” இம்ரான் கான் கைதால் இப்படியொரு பாதிப்பா! அடப்பாவமே!!
பாகிஸ்தானில் இம்ரான் கான் கைதால் அங்கே சட்ட ஒழுங்கு பாதிப்பு மட்டும் ஏற்படவில்லை. பொருளாதார ரீதியாகவும் பாகிஸ்தானில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நேற்று துணை ராணுவ படையினர் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்த நிலையில், அவர் தொடர்ந்து கைதாவதைத் தவிர்த்தே வந்தார். இந்தச் சூழலில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டிற்கு வழக்கு ஒன்றின் விசாரணைக்கு வந்த இம்ரான் கான், அங்கே வைத்து கைது செய்யப்பட்டார் அவர் காதர் அறக்கட்டளை வழக்கில் கைது செய்யப்பட்டார்..
இம்ரான் கான் கைது செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தான் முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.. இம்ரான் கான் கடந்தாண்டு வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர். 70 வயதான இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அங்கே பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது. அவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ குறித்து சில சர்ச்சை கருத்துகளைக் கூறிய நிலையில் மறுநாளே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 70 வயதான இம்ரான் கான் கைதை கண்டித்து அங்கே நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் முழுக்க மிகப் பெரிய குழப்பமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டம் சில இடங்களில் தீவைப்பு போன்ற வன்முறையிலும் முடிந்துள்ளது.. இதில் அங்கே ஐந்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்..
இதனால் அங்கே பாகிஸ்தான் முழுக்க பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இம்ரான் கானின் உதவியாளர் ஆசாத் உமரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பிடிஐ தலைவரும் இம்ரான் கானின் உதவியாளருமான ஆசாத் உமர் என்பவரும் இன்று நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே இம்ரான் கான் மீது இப்போது மற்றொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. பிரதமராக இருந்த போது தான் பெற்ற பரிசுகளை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை மறைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கிலும் இம்ரான் கான் மீது இன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
வெளிநாட்டுப் பிரமுகர்கள் வழங்கிய பரிசுகளை விற்று அவர் பெற்ற நிதியை பாக். அரசிடம் அறிவிக்கவில்லை என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு ஆகும். அதாவது ஒரு நாட்டில் அரசு பொறுப்பில் இருப்பவர்கள் வெளியே சென்றால் அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். இதுபோல வழங்கப்படும் பரிசுகள் அந்த நாட்டிற்குத் தான் வழங்கப்படுகிறதே தவிர.. அவர்களுக்கு இல்லை. எனவே, இப்படி பரிசுகளைப் பெற்றால் அது கருவூலத்திற்கு அனுப்பப்பட வேண்டும். ஆனால், அதை இம்ரான் கான் மறைத்ததாகவே அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
அங்கே சில இடங்களில் நிலைமை கையை மீறிச் சென்றுள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த ராணுவமும் இறங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இம்ரான் கான் கைதால் சட்ட ஒழுங்கு பாதிப்பு மட்டும் ஏற்படவில்லை. பொருளாதார ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இம்ரான் கான் கைதுக்குப் பிறகு பாகிஸ்தான் ரூபாய், அரசு கடன் பத்திரங்கள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்று இம்ரான் கான் கைது செய்யப்பட்ட நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 1.3 சதவீதம் சரிந்து 288.5ஆக சரிந்துள்ளது. அதேபோல பாகிஸ்தானின் 2024 சர்வதேச கடன் பத்திரங்களின் மதிப்பும் டாலரில் 0.4 சென்ட்கள் வீழ்ச்சியடைந்துள்ளன.