ரூ.5,500 கோடி ஊழல் வழக்கில் கைதான இம்ரான் கானை 8 நாள் காவலில் விசாரிக்க அனுமதி: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு!!
பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான்கானை போலீசார் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது, அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய நிலையில், 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் நீதிமன்ற உத்தரவின்படி கடந்தாண்டு பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, தோஷகானா உள்ளிட்ட ஊழல், வன்முறை, தேர்தல் ஆணைய அவதூறு, தேச துரோகம், தீவிரவாதத்தை தூண்டியது என மொத்தம்120 வழக்குகள் அவர் மீது பதியப்பட்டுள்ளன.
இதனிடையே, ஊழல் வழக்கில் ஆஜராக நேற்று முன்தினம் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் வந்த இம்ரான் கானை துணை ராணுவத்தினர் கைது செய்து இழுத்து சென்றனர். அல்-காதிர் பல்கலைக் கழகத்தை தொடங்குவதற்காக அல்-காதிர் அறக்கட்டளை அமைத்து நிலம் வாங்கிய முறைகேட்டில் இம்ரான் கான் அரசுக்கு ரூ.5500 கோடி இழப்பு ஏற்படுத்தியதான குற்றச்சாட்டில், தேசிய பொறுப்புக்கூறல் ஆணைய உத்தரவின் பேரில் இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளார். இம்ரான் கானின் 2 ஊழல் வழக்குகளை விசாரிக்க இஸ்லாமாபாத் போலீஸ் தலைமை அலுவகத்தில் உள்ள போலீஸ் விருந்தினர் மாளிகையை சிறப்பு நீதிமன்றமாக பயன்படுத்தி கொள்ளும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இம்ரான் கான் தேசிய பொறுப்புகூறல் (என்ஏபி) நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை நீதிபதி முகமது பஷீர் விசாரித்தார். இவர் முன்னாள் பிர தமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோரை ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்தவர் ஆவார். அப்போது, இம்ரான்கானை 14 காவலில் எடுத்து விசாரிக்க என்ஏபி தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டனர். ஆனால் இம்ரான் தரப்பில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் கட்டுக்கதை என்பதால் அவரை விடுவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இம்ரான் கானை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க என்ஏபி போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதனிடையே, இம்ரான் கானை நீதிமன்றத்தில் சந்திக்க விடாமல் போலீசார் தடுப்பதாக கூறி அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஷா முகமது குரேஷி, பொது செயலாளர் ஆசாத் உமர் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பாத்ரூமிற்கு கூட செல்லவில்லை: நீதிமன்றத்தில் பேசிய இம்ரான் கான், “கடந்த 24 மணி நேரத்தில் பாத்ரூம் கூட செல்லவில்லை. எனது மருத்துவர் டாக்டர் பைசல் சுல்தான் என்னை சந்திக்க அனுமதிக்க வேண்டும். மக்சூத் சப்ராசிக்கு ஏற்பட்ட நிலை போல எனக்கும் நேருமோ என்று அச்சமாக இருக்கிறது. அவர்கள் ஒரு ஊசி போடுவார்கள். பிறகு மெதுவாக இறந்து விடுவோம்,” என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.
பிரதமர் நவாஸ் ஷெரிப் மீதான நிதி மோசடி வழக்கில் முக்கிய சாட்சியான மக்சூத் சப்ராசி கடந்தாண்டு நெஞ்சுவலியால் காலமானதாக கூறப்படுகிறது. ஆனால் பிடிஐ கட்சி இதனை மர்மச்சாவு என்று கூறியது.
உச்சநீதிமன்றத்தில் மனு: அல்-காதிர் பல்கலைக் கழக முறைகேட்டில் குற்றவாளி என உத்தரவிட்ட இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் அலி ஜாபர், மற்றும் பவாத் சவுதாரி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அல்-காதிர் வழக்கு அரசியல் ரீதியாக பழி வாங்குவதற்காக புனையப்பட்டது. பிடிஐ இதனை அரசியல் மற்றும் சட்ட ரீதியில் எதிர்கொள்ளும் என்று ஷா அகமது குரேஷி தெரிவித்தார்.
தோஷகானா வழக்கில் குற்றவாளி: பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் தொடரப்பட்ட தோஷகானா வழக்கில், பல மாதங்களுக்கு பின், இம்ரான் கான் நேற்று மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஹூமாயுன் திலாவர் இந்த வழக்கில் இம்ரான் குற்றவாளி என தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.