பெண் எழுத்தாளருக்கு பாலியல் தொல்லை: ரூ.41 கோடி இழப்பீடு வழங்க டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு!!
பெண் எழுத்தாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாஜி அதிபர் டிரம்ப்புக்கு ரூ.41 கோடி இழப்பீடு வழங்க, அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்தவர் டொனால்ட் டிரம்ப் (76). இவர், குடியரசு கட்சியை சேர்ந்தவர். பதவியில் இருந்த போதே பல சர்ச்சைகளில் சிக்கினார். அதிபர் தேர்தலில் தோற்ற பின், அதில் மிகப் பெரியளவில் மோசடி நடந்தாக சொல்லி சர்ச்சையை கிளப்பினார். அடுத்தாண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
இந்த சூழலில் இவர் மீது பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்(44) உடன் உல்லாசம் அனுபவித்ததோடு, அதனை மறைப்பதற்காகத் தேர்தல் நிதியைச் செலவழித்ததாக டிரம்ப் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதனை அடுத்து அவர் பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்டார். பிரபல பெண் எழுத்தாளர் இ. ஜீன் கரோல்(79), கடந்த 1996 ம் ஆண்டு டிரம்ப் தன்னை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். விசாரணையின் போது டிரம்ப் நீதிமன்றத்துக்கு வரவில்லை. ஆனால், கரோலை ஒருபோதும் நான் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை, அவரைப் பற்றி எனக்குத் தெரியாது என டிரம்ப் கூறினார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணையில், பாலியல் தொல்லை கொடுத்ததற்கும், அவதூறு பரப்பியதற்காகவும் கரோலுக்கு இழப்பீடாக ரூ.41 கோடி டிரம்ப் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆயினும் டிரம்ப் பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டை நீதிபதி நிராகரித்தார். தீர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்த டிரம்ப் ‘‘தமக்கு நேர்ந்த அவமானம்’’ என்றார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக டிரம்பின் வக்கீல் தெரிவித்தார்.