;
Athirady Tamil News

‘ஹெல்மெட்’ அணியாமல் சென்று சிக்கிய கணவர்: வேறு பெண்ணுடன் சென்றதை காட்டி கொடுத்த கேமிரா!!

0

என்னங்க… பைக்கில் வேறு ஒரு பெண்ணுடன் நீங்கள் சென்றதை பார்த்ததாக பக்கத்து வீட்டு அக்கா சொன்னாங்க.. அது உண்மையா? “ஏய்… உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா? யாரோ ஒருத்தர் சொன்னதை கேட்டு என்னை சந்தேகப்படுறீயே… அப்படி இல்லீங்க… காலம் போகும் போக்கு சரியில்லை. இந்த மாதிரி எத்தனையோ சம்பவங்களை தினமும் செய்திதாள்களில் படிக்கிறேன். அதான் பயமா இருக்கு! எனக்கும் நம் பிள்ளைகளுக்கும் துரோகம் செஞ்சிடாதீங்க… அட… என்ன நீ… உனக்கு நான் துரோகம் பண்ணுவேனா? என்னை நம்பு. உன் மீது சத்தியமா சொல்கிறேன். எந்த பெண்ணையும் நான் பைக்கில் ஏற்றி செல்லவில்லை என்று மனைவியை சமாளிப்பதற்குள் ஒரு வழியாகிவிடும். ஆனாலும் முழு திருப்தி அடையாமல் லேசான சந்தேகத்துடன் ‘அப்படி, ஏதாவது தப்பு செஞ்சீங்க… நான் பொம்பளையா இருக்க மாட்டேன்…’ என்று மனைவி எச்சரிப்பதை கேட்டு ‘அப்பாடா… ஒரு வழியா நம்ப வைத்து சமாளித்து விட்டோம்’ என்று கணவர் ஆறுதல் அடைந்த காலம் உண்டு. கணவன்மாரே உஷார். நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகள் உங்களை கண்டுபிடித்து ஆதாரத்துடன் உங்கள் மனைவியிடமே போட்டுக் கொடுக்கவும் வாய்ப்பு உண்டு. இதற்கு கேரளாவில் நடந்திருக்கும் சம்பவமே சாட்சி. கேரள மாநிலம் இடுக்கியை பூர்வீகமாக கொண்டவர் 32 வயது வாலிபர் பிரசன்னா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளார்கள். தற்போது இந்த தம்பதியினர் திருவனந்தபுரம் அருகே வசித்து வருகிறார்கள்.

பிரசன்னா ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். தினமும் டூ வீலரில் வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருகிறார். அவருடைய போதாத நேரம் இப்படி சிக்குவோம் என்று அவர் எதிர்பார்த்து இருக்கவேமாட்டார். கடந்த மாதம் 25-ந் தேதி கடையில் இருந்து திரும்பும்போது தனது பெண் தோழி ஒருவரை பைக்கில் ஏற்றிக் கொண்டு திருவனந்தபுரம் நகரில் ஜாலியாக வலம் வந்துள்ளார். கேரளாவில் முக்கிய இடங்கள் அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் அதி நவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளை அது படம்பிடித்து அனுப்பிவிடும். அபராத தொகையும் எவ்வளவு என்பது வீட்டுக்கே சென்றுவிடும். ஒவ்வொருவரையும் நிறுத்தி அபராதம் விதிக்கும் பெரிய தலைவலி கேரள போக்குவரத்து போலீசுக்கு இல்லை. சம்பவத்தன்று பெண்ணுடன் ஊர் சுற்றிய பிரசன்னா ஜாலி மூடில் இருந்ததால் ‘ஹெல்மெட்’ அணிந்து செல்ல மறந்து போனார். சாலையில் சென்றபோது இதை படம் பிடித்து இருக்கிறது கேமிரா.

துரதிருஷ்டம் என்ன வென்றால் அந்த டூ வீலர் பிரசன்னாவின் மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டது. எனவே கேமிரா பிடித்த போட்டோவை வண்டி உரிமையாளரான பிரசன்னாவின் மனைவியின் செல்போனுக்கே அனுப்பி வைத்துவிட்டது. அபராத தொகையை பற்றி பிரசன்னாவின் மனைவி கவலைப்படவில்லை. அவருக்கு பின்னால் ‘ஈ’ என்று இளித்தபடி ஒரு பெண் தோளில் கைபோட்டபடி இருக்கிறாளே அவள் யார்? என்பதுதான் ஆத்திரத்தில் கொந்தளிக்க வைத்தது. வரட்டும்… என்று காத்திருந்தவர் அழைப்பு மணி ஒலித்ததும் கணவர்தான் வருகிறார் என்பதை அறிந்து கதவை திறந்தார். மனைவி வழக்கம் போல் இல்லையே சேலையை வரிந்து கட்டிக் கொண்டு பத்திரகாளியாட்டம் தெரியுறாளே… என்னவென்று தெரியவில்லையே என்று மனதுக்குள் ஒருவிதமான கலக்கத்துடனேயே வீட்டுக்குள் சென்ற பிரசன்னா வேலை களைப்பில் நாற்காலியில் அமர்ந்தார். வழக்கமாக வீடு திரும்பியதும் சிரித்து கொண்டே வரவேற்று ஆவிபறக்க கொண்டு தரும் காபி களைப்பை நீக்கிவிடும்.

ஆனால் இன்று முகத்திலும் சிரிப்பை காணோமே என்று யோசித்து கொண்டிருந்தபோது சமையலறையில் பாத்திரங்கள் விழுந்து உடைவது போல் பயங்கர சத்தம் கேட்டது. ஆஹா… ஏதோ வில்லங்கம் வரப்போகுது என்பதை பிரசன்னாவும் யூகித்து கொண்டார். சிறிது நேரத்தில் வெளியே வந்த மனைவி நேராக பிரசன்னாவின் அருகில் போய் நின்று கொண்டு “யாருய்யா.. அந்த பெண்” என்று நேராகவே கேள்வியை போட்டார். பெண்ணா… நீ என்ன கேட்கிறாய்? என்று எதுவும் புரியாதது போல் தவித்த பிரசன்னாவிடம் “சமாளிக்காதேய்யா… அதான் உன் மூஞ்சியே சொல்லுதே பைக்கில் ஒருத்தியை ஏற்றிக் கொண்டு ஊர் சுத்துறியே அந்த பெண் யார்” என்று கேட்டேன் என்றார். “ஏய்… நீ என்ன சொல்றே… பைக்கில் பெண்ணா… என்ன கனவு ஏதாச்சும் கண்டியா…? ஆமாய்யா… கனவு வேற காண வேண்டுமா? உன் லட்சணம் தான் ஊருக்கே தெரிந்து இருக்கிறதே. இதில் கனவு வேறு காண வேண்டுமாக்கும்… உண்மைய சொல்லு… இல்லாட்டி நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்றார். அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தார் பிரசன்னா.

அதை பார்த்து ‘என்னய்யா… அமைதியா இருந்தால் நடந்ததெல்லாம் இல்லை என்று ஆகிவிடுமா?’ என்று அதிர்ந்தார். சந்தேகப்படும் உன்னை எப்படி நான் சமாளிப்பது என்று கம்மிய குரலில் பம்மிய பிரசன்னாவிடம் தனது செல்போனில் இருந்த போட்டோவை காட்டி இனியாவது நம்புவியா? இது யார்? என்றார். இதுக்குத்தான் இவ்வளவு கோபமா? என்று வலுக்கட்டாயமாக முகத்தில் சிரிப்பையும், கையையும் போட்டபடி அமர்ந்து இருக்கிறாளே? கேட்டு தகராறு செய்தார். இந்த தகராறு அன்றோடு முடிந்துவிட வில்லை. அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்தது. பிரசன்னாவும் பதிலுக்கு கத்த வீடே போர்க்களமாகிப் போனது. தகராறு முற்றிய நிலையில் அந்தப் பெண் கரமனை போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார்.

தனது கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னையும், தனது பிள்ளைகளையும் கொடுமைபடுத்துவதாக புகாரை கொடுத்து ஆதாரமாக கேமிரா அனுப்பி இருந்த போட்டோவையும் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இ.பி.கோ.321 (வேண்டுமென்றே காயப்படுத்துதல்), 341 (தவறான கட்டுப்பாடுகளை செய்தல்), 294 (பொது இடத்தில் ஆபாச செயலை செய்தல்), சிறார் சட்டம் 75 (குழந்தைகளை புறக்கணிப்பது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரசன்னாவை கைது செய்தனர். ஆணோ, பெண்ணோ… ஊருக்கு தெரியாது என்று தவறுகள் செய்தால் மனித கண்களை தாண்டி செயற்கை கண்களும் கண்காணிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.