சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு காரில் கடத்திய 5 கிலோ தங்கம் பறிமுதல்- 4 பேரிடம் விசாரணை!!
தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரெயில், பஸ், கார்கள் மூலம் தங்கம் கடத்தப்படுகிறது. இதனை தடுக்க ஆந்திர மாநில சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தள்ளம்பள்ளி என்ற இடத்தில் நாயுடு பேட்டை போலீசார் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து நெல்லூருக்கு சென்று கொண்டிருந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் 5 கிலோ எடையுள்ள தங்க பிஸ்கெட்டுகள் இருந்தன. தங்கத்தை அவர்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் காரில் இருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தங்கம் கடத்தி வந்த 4 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. காருடன் தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 5 கிலோ தங்கமும், சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்டுள்ளது. யாருக்காக கடத்தி வரப்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் ஆந்திராவில் சென்னையில் இருந்து கடத்தப்பட்ட 14.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஏப்ரல் மாதம் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு கடத்தி வந்த 7.3 கிலோ தங்க கட்டிகள் ஆந்திராவில் பிடிப்பட்டது. தொடர் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.