குடிசைகளில் தீப்பிடித்து விபத்து- 4 குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு !!
உத்திரப் பிரதேசம் மாநிலம், கோரக்பூர் மாவட்டம் ராம்கோலா காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள மகி மதியா கிராமத்தில் உள்ள குடிசையில் நேற்று திடீரென தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பக்கத்து குடிசைகளிலும் தீப்பிடித்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் குடிசைகளில் மக்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் அலறியடித்துக் கொண்டு தப்பிக்க முயன்றனர். ஆனால் தீ அதிகளவில் பரவி மாற்றுத்திறனாளி பெண் மற்றும் 4 குழந்தைகள் என 5 பேர் பலியாகினர்.
ஷேர் முகமது என்பவரது மாற்றுத்திறனாளி மனைவி பாத்திமா மற்றும் அவரது நான்கு குழந்தைகளான ரோகி (6), அமினா (4), ஆயிஷா (2), மற்றும் இரண்டு மாத குழந்தை கதீஜா ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். இதில் மூன்று பேர் மருத்துவமயைில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்ததோடு, தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.