உச்ச நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்புக்கு பிறகு துணை நிலை ஆளுநரை சந்திக்கும் டெல்லி முதல்வர்!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சிக்கும் துணை நிலை ஆளுனருக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இங்கு மத்திய குடிமை பணிகள் அதிகாரிகள் நியமனம் என்பது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் பணி நியமனம், பணி இட மாற்றத்தை மத்திய அரசுதான் மேற்கொண்டு வருகிறது. இதனை டெல்லி அரசு விரும்பவில்லை. அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசிடம் இருக்கும் அதிகாரத்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில், டெல்லியில் துணைநிலை கவர்னரை விட முதலமைச்சருக்கே அதிகாரம் இருக்கிறது.
டெல்லி அரசின் அன்றாட நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். தீர்ப்பை வரவேற்ற ஆம் ஆத்மி தனது டுவிட்டர் பக்கத்தில் பதவி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,” தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் அதிகாரம் இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மூலம் மட்டுமே அதிகாரிகள் பணியாற்றுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை இன்று மாலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கெஜ்ரிவால் ஆளுநரிடம் சந்திப்புக்கு கேட்டிருந்தார். அதன்படி, இன்று மாலை 4 மணியளவில் இருவரும் சந்திக்கின்றனர்.