தேர்தல் வன்முறை.. கர்நாடகாவில் பா.ஜ.க.- காங்கிரஸ் கட்சியினர் மோதல்: 144 தடை உத்தரவு !!
கர்நாடகாவில் நேற்று ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து உள்ளது. நாளை மறுதினம் வாக்குகள் எண்ணப்படுகின்றன. நேற்று வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு மங்களூருவின் மூடுஷெட்டே என்ற பகுதியில் நேற்று இரவு காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கற்களை வீசி தாக்கினர். இதில் ஒரு போலீஸ்காரர் உள்பட 4 பேர் காயமடைந்தனர். மோதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த மோதலை தொடர்ந்து, நகரில் பதற்றம் நீடிப்பதால் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க 5 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவு மே 14ம் தேதி மாலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூட்பித்ரி காங்கிரஸ் வேட்பாளர் மிதுன் ராயின் வாகனம் சென்றபோது, மூடுஷெட்டே பகுதியில் பாஜகவினர் திரண்டு நின்று, பிரதமர் மோடிக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பி உள்ளனர். அவர்களுக்கு போட்டியாக காங்கிரஸ் தொண்டர்களும் முழக்கங்கள் எழுப்பி உள்ளனர். அதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.