தோழியை காக்பிட்-இல் அனுமதித்த விமானி பணியிடைநீக்கம் – ஏர் இந்தியாவுக்கு ரூ. 30 லட்சம் அபராதம்!!!
துபாயில் இருந்து டெல்லி வந்த விமானத்தின் காக்பிட்டில் தனது பெண் தோழியை பயணிக்க செய்த விமானி மூன்று மாதங்களுக்கு பணியிடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ஏர் இந்தியாவுக்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. “விமான பயணி ஒருவரை காக்பிட்டிற்குள் அனுமதித்து பயணம் செய்ய வைத்த விமானியின் செயல் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிகளுக்கு எதிரானது.
பாதுகாப்பு விதிகளை மீறிய இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனம் முறையான நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டது,” என்று டிஜிசிஏ தெரிவித்து இருக்கிறது. “மிக முக்கியமான பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்தாமல், முறையான நடவடிக்கை எடுக்க தவறிய ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் விமானத்தை இயக்கிய விமானி தனது அதிகாரத்தை கொண்டு விமான விதிகள் 1937-ஐ மீறிய குற்றத்திற்காக மூன்று மாதங்களுக்கு பணிஇடைநீக்கம் செய்யப்படுகிறார். இந்த விதிமீறலை தடுக்காமல் இருந்த துணை விமானிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,” என்று டிஜிசிஏ தெரிவித்துள்ளது.