ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களுக்கு கிடைத்து இருப்பது தற்காலிக உயிர்பிச்சை: உத்தவ் தாக்கரே!
மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசில் நகர்புற மேம்பாட்டு துறை மந்திரியாக இருந்தவர் ஏக்நாத் ஷிண்டே. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனாவில் உத்தவ் தாக்கரேக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கி அரசை கவிழ்த்தார். பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து முதல்-மந்திரி ஆனார். உத்தவ் தாக்கரே அரசு கவிழும் முன் ஏக்நாத் ஷிண்டே உள்பட சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேருக்கு அப்போதைய துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த மராட்டிய அரசியல் நெருக்கடி தொடர்பான வழக்குகளில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கும் அடங்கும். நேற்று முன்தினம் வழக்கில் தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, நிலுவையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்மானம் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் 16 எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்ட உயிர்பிச்சை தற்காலிகமானது தான். சுப்ரீம் கோர்ட்டு குறிப்பட்ட காலத்தில் தகுதி நீக்க விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என கூறியுள்ளது. எனவே எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்மானத்தின் மீது சபாநாயகர் விரைவாக முடிவு எடுக்க வேண்டும். முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி இருந்தால் என்னை மீண்டும் முதல்-மந்திரி பதவியில் அமர்த்தி இருக்க முடியும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தது எனக்கு திருப்தி அளிக்கிறது. தார்மீக அடிப்படையில் நான் அதை செய்தேன். மக்கள் மன்றத்தை சந்திக்க நான் பா.ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு சவால் விடுக்கிறேன். என்னை சட்டசபையில் பலத்தை நிரூபிக்குமாறு கவர்னர் கூறியதே சட்டவிரோதம் என்று கோர்ட்டு கூறியுள்ளது. அப்படியெனில் தற்போது உள்ள அரசு சட்டவிரோதமானது தான். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது உடனிருந்த உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் அனில் பரப் கூறுகையில், “இந்த அரசு சட்டவிரோதமானது என கூறி வருகிறோம். கொறடாவின் பங்கு முக்கியமானது. அந்த நேரத்தில் கொறடாவாக எங்கள் அணியை சேர்ந்த சுனில் பிரபு இருந்தார். எனவே ஷிண்டே அணியினர் கொறடா உத்தரவை மீறி உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் அதிக காலம் எடுத்து கொள்ளக்கூடாது. அதிருப்தி அணி எம்.எல்.ஏ.க்கள் தப்பிக்க முடியாது. அவர்களுக்கு குறைந்த நேரம் தான் உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க சபாநாயகர் ராகுல் நர்வேக்கருக்கு கடிதம் எழுதுவோம்” என்றார்.