பயிற்சியின்போது மின்கம்பியில் பாராசூட் சிக்கியதால் ராணுவ கமாண்டோ வீரர் உயிரிழப்பு !!
காஷ்மீரை சேர்ந்தவர் ராணுவ கமாண்டோ வீரர் அங்குர் சர்மா. இவர், விமானத்தில் இருந்து பாராசூட்டில் கீழே குதித்து பயிற்சி எடுப்பதற்காக, உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள விமானப்படை நிலையத்துக்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் பயிற்சியில் கலந்து கொண்டார். விமானத்தில் பயணித்த அவர், 8 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, அதில் இருந்து பாராசூட்டில் கீழே குதித்தார். மல்புரா பகுதியில் பாராசூட் தரை இறங்குவதற்கான மண்டலத்தை நோக்கி அவர் குதித்தார். முதலில், சரியான பாதையில் தரையை நோக்கி வந்தார்.
திடீரென பலத்த காற்று வீசியதால், அவர் இறங்க வேண்டிய இடத்தில் இருந்து 2 கி.மீ. தூரம் பாராசூட் விலகி சென்றது. அந்த பாதையில் இருந்த உயர் அழுத்த மின்கம்பியில் பாராசூட் சிக்கிக் கொண்டது. அடுத்த சில வினாடிகளில் பாராசூட் தீப்பிடித்துக் கொண்டது. இதனால் பாராசூட் கயிறு எரிந்து, அங்குர் சர்மா, உயரத்தில் இருந்து தரையில் விழுந்தார். அவர் தீக்காயமும் அடைந்தார். அவரை ஆக்ரா ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு, அங்குர் சர்மா உடல், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.