கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி – ஏழைகளின் சக்தி வென்றது: ராகுல் காந்தி கருத்து!!!
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 138 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதியாகி இருக்கிறது. கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி, அம்மாநில மக்களுக்கு தனது நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர் மேலும் கூறியதாவது.., “வெறுப்புணர்வுகளை எதிர்த்து கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. வெறுப்பு உணர்வு இல்லாமல் கர்நாடக தேர்தலில் போட்டியிட்டோம். மக்களின் சக்தி வெற்றி பெற்று இருக்கிறது. இதே நிலை மற்ற மாநிலங்களிலும் தொடரும். காங்கிரஸ் கட்சி ஏழை மக்களின் பிரச்சனைகளுக்காக போராடி வந்தது. தேர்தலில் காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகள் விரைந்து நிறைவேற்றப்படும்” என்று அவர் தெரிவித்தார்.