கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட அமெரிக்காவின் புலம்பெயர் கட்டுப்பாடு காலாவதியானது: புதிய விதியால் தஞ்சமடைய வந்தவர்கள் எல்லையில் தவிப்பு!!
கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட புலம்பெயர் கட்டுப்பாடு விதி, 3 ஆண்டுக்குப் பின் காலாவதியானதை தொடர்ந்து அமெரிக்காவில் தஞ்சமடையும் ஆசையில் ஏராளமானோர் எல்லையில் குவிந்தனர். ஆனாலும் அதிபர் பைடனின் புதிய விதிமுறையால் குடும்பத்துடன் அவர்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மெக்சிகோ வழியாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அகதிகளாகவும் சட்டவிரோதமாகவும் அமெரிக்காவில் தஞ்சமடைகின்றனர். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவலைத் தொடர்ந்து, புலம்பெயர்வோரை திருப்பி அனுப்ப டைட்டில் 42 எனும் விதி அதிபர் டிரம்ப் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
இதன்படி, வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக புலம்பெயர வந்த பலரும் திரும்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில், பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு இந்த டைட்டில் 42 விதி நேற்று காலையுடன் காலாவதியானது. முன்னதாக, இந்த விதி நீக்கப்படுவதைத் தொடர்ந்து அமெரிக்காவில் தஞ்சமடைய கடந்த சில நாட்களாகவே மெக்சிகோ எல்லையை ஒட்டி பகுதிகளில் ஏராளமான புலம்பெயர் மக்கள் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். மெக்சிகோவின் மடாமோரோஸிலிருந்து ரியோ கிராண்டி ஆற்றை நீந்திக் கடந்து டெக்சாஸ் மாகாணம் பிரவுன்ஸ்வில்லிக்கு ஏராளமானோர் வந்தனர். அவர்கள் டெக்சாஸ் எல்லையில் முள்வேலிக்கு முன்பாக அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளால் தடுக்கப்பட்டனர்.
டைட்டில் 42 விதி காலாவதியானாலும் அமெரிக்கா-மெக்சிகோ எல்லை திறக்கப்படவில்லை என அமெரிக்க அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர். இதனால் புலம்பெயர்பவர்கள் குவிவது ஆபத்தானது எனவும் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினர். புலம்பெயர்வோரை ஏற்க அதிபர் பைடன் அரசு புதிய விதிமுறை கொண்டு வர உள்ளது. அதற்கு முன்பாக அமெரிக்காவில் நுழைந்து விட ஆயிரக்கணக்கானோர் முண்டியடிக்கின்றனர். இதனால் தினமும் 10,000 பேருக்கு மேல் எல்லையில் குவிவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம், புதிய விதியானது சட்டவிரோத புலம்பெயர்வோரை தடுப்பதையும், புலம்பெயர்வதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து உரிய அனுமதி பெறுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் கூறி உள்னர். ஆனால் இது புலம்பெயர்வோரை கவலை அடைய வைத்துள்ளது. குழந்தைகள் உட்பட சிலர், எங்கு செல்வது, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மெக்சிகோ-அமெரிக்க எல்லையில் முட்கம்பிகள் முன்பாக காத்திருக்கின்றனர்.