கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கமும், பா.ஜ.க.வின் பின்னடைவும்!!
கர்நாடக தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும், ஆளும் பா.ஜ.க. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ம.ஜ.த. இடையே மும்முனைப் போட்டி நிலவியது. இதுவரை 15 முறை நடந்த கர்நாடகா சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே வென்று ஆட்சியமைத்துள்ளது. ஆனால் கடைசி 30 ஆண்டுகளில் இரு கட்சிகளும் மாறி மாறித்தான் ஆட்சி செய்து வருகின்றன. இந்தமுறை 16-வது சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் கருதப்பட்டது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பா.ஜ.க. ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால் இந்த தேர்தல் பா.ஜ.க.வை பொறுத்தவரை மிகவும் முக்கியமான தேர்தலாக கருதப்பட்டது.
ராகுலின் நடைபயணம், எம்.பி. பதவி பறிப்பு போன்ற விஷயங்களும், பா.ஜ.க.வின் கண்கவர் தேர்தல் அறிக்கைகளும் தேர்தல் சூழலை மாற்றிக்கொண்டே இருந்தன. என்றாலும் பெரும்பான்மை மக்கள் காங்கிரசை ஆதரித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் அறுதி பெரும்பான்மை பெறும் நிலை உருவாகி உள்ளது. வாக்குப்பதிவு முடிந்த சிறிது நேரத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பினை பல்வேறு நிறுவனங்கள் நடத்தி அதன் முடிவை வெளியிட்டன. மொத்தம் உள்ள 224 இடங்களில் 113 இடங்களை பிடித்தால் மட்டுமே தனிப்பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைக்க முடியும். ஆனால் பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகள் அங்கு எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்காது, தொங்கு சட்டசபை அமையும் என்றும், காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வரும் என்றும் பலவாறு கூறின.
கருத்துக்கணிப்புகள் கூறியபடி காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையை பெற்று உள்ளது. இந்த தேர்தலை பொறுத்தவரை ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைப்பயணம் காங்கிரசின் செல்வாக்கை மேம்படுத்தியது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை, ஒரு வீட்டுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம். பிபிஎல் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வேலையில்லா பட்டயதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை போன்ற திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
சித்தராமையா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அன்னபாக்யா, இலவச பால், மாணவர் விடுதி உதவித்தொகை, விளைநில மேம்பாட்டுத் திட்டம் இந்திரா உணவகம் போன்றவை கிராமப்புற மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. சிறுபான்மையின மக்களின் ஆதரவு காங்கிரஸூக்கு சாதகமான சூழலை உருவாக்கின. காங்கிரஸ் தேசியத் தலைவராக கர்நாடகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்றது. தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகள் காங்கிரசுக்கு மாற வாய்ப்பாக இருந்தது. பொதுவாக கர்நாடகாவில் தேர்தல் வெற்றியின் முக்கிய பகுதி சமுதாய அடிப்படையிலான அரசியல். மாநிலத்தில் பல்வேறு சமுதாய அமைப்புகள் உள்ளன. இருப்பினும், மிகவும் முக்கியமானவர்கள் லிங்காயத்துகள் மற்றும் ஒக்கலிகாக்கள். பொதுவான அரசியல் வாக்குறுதிகளை பிரதான கட்சிகளான பா.ஜ.க.வும், காங்கிரசும் அளித்தாலும் சமுதாய வாக்குகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இங்கு லிங்காயத்து மற்றும் ஒக்கலிகர்கள் சமூகத்தினரின் வாக்குகள்தான் வெற்றியை தீர்மானித்து வருகிறது. கர்நாடக மக்கள் தொகையில் 17 சதவீத மக்கள் லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஒக்கலிகர்கள் 15 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 35 சதவீதமும் உள்ளனர்.
எஸ்.சி,எஸ்.டி. சமூகத்தினர் 18 சதவீதமும், இஸ்லாமியர்கள் 12.92 சதவீதமும் உள்ளனர். மீதமுள்ளவர்கள் பிராமணர்கள் ஆவர். கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் லிங்காயத்து சமூகத்தினர் மட்டும் 67 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வாகினர். இதில் பாஜகவில் 40 பேர், காங்கிரசில் 20 பேர் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த 6 பேர் மற்றும் பிற கட்சியைச் சேர்ந்த ஒருவர் அடங்குவர். ஒக்கலிகர்கள் சமூகத்தினர் 44 இடங்களில் வெற்றி பெற்றனர். இதில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினருக்குத்தான் அதிக எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தனர். அந்த கட்சியில் மட்டும் 21 பேர் ஒக்கலிகர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். பா.ஜ.க.வில் கடந்த முறை தேர்தலில் 14 பேரும், காங்கிரசில் 9 எம்.எல்.ஏ.க்களும் ஒக்கலிகர்கள் ஆவர். இதேபோல் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மக்கள் தொகையில் அதிகம் இருந்தாலும் கடந்த தேர்தலில் 24 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே தேர்வாகினர்.
மொத்தம் 18 இஸ்லாமிய எம்.எல்.ஏ.க்கள் கடந்த முறை சட்டமன்றம் சென்றனர். காங்கிரஸ் கட்சியில் 11 எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க.வில் 6, மதசார்பற்ற ஜனதாதளத்தில் ஒரு எம்.எல்.ஏ. இஸ்லாமியர் இருந்தனர். பாரதிய ஜனதாவின் வாக்கு வங்கியாக கருதப்படும் லிங்காயத் சமூகத்தினர் வட கர்நாடகத்திலும், கடலோர மாவட்டங்களிலும் அதிகமாக வசிக்கிறார்கள். இந்த சமுதாய மக்களிடையே செல்வாக்கு பெற்று விளங்கும் எடியூரப்பா வயது மூப்பு காரணமாக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி ஆகியோரும் லிங்காயத் சமூகத்தினரிடையே செல்வாக்கு பெற்ற தலைவர்களாக உள்ளனர்.
இவர்களில் ஜெகதீஷ் ஷெட்டரும், லட்சுமண் சவதியும் ‘டிக்கெட்’ கிடைக்காததால் பாரதிய ஜனதாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு காங்கிரசுக்கு தாவி அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டனர். இதெல்லாம் பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவாக இருந்தது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலித் சமூகத்தையும், மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் ஒக்கலிக சமூகத்தையும், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா குருபா சமூகத்தையும் சேர்ந்தவர்கள். தங்கள் சமூகத்தினரிடையே அவர்கள் செல்வாக்கு பெற்று விளங்குகிறார்கள். அதிரடி அரசியலில் கில்லாடியான டி.கே.சிவக்குமார் பாரதிய ஜனதாவுக்கு பெரும் சவாலாக திகழ்ந்தார். பாரதிய ஜனதா அரசின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி, அரசுக்கு எதிரான ஊழல் புகார்கள், அந்த கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல், சுமார் 13 சதவீதம் உள்ள சிறுபான்மையினர் வாக்குகள் ஆகிய அம்சங்கள் காங்கிரசுக்கு சாதகமாக மாறின.
கர்நாடக மக்கள் கடந்த காலங்களில் எந்தவொரு கட்சிக்கும் தொடர்ச்சியாக வாய்ப்பு அளித்ததே இல்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு சித்தராமையா-டிகே சிவக்குமார் என இரு வலிமையான தலைமையைக் காங்கிரஸ் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் ஹைதரபாத் கர்நாடகா, மும்பை கர்நாடகா, பழைய மைசூர், கடலோர கர்நாடகா, மத்திய கர்நாடகா, பெங்களூரு என 6 மண்டலங்கள் உள்ளன. இதில் மும்பை கர்நாடகா மண்டலத்தில் மொத்தம் 50 தொகுதிகள் உள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகள் காங்கிரஸ் வசம் வந்துள்ளது. பழைய மைசூர் மண்டலத்தில் மொத்தம் 55 தொகுதிகள் உள்ளன. இந்த மண்டலம் ஜே.டி.எஸ். கட்சியின் கோட்டையாகும். ஆனால் இங்கு ஜே.டி.எஸ். கோட்டை தகர்ந்துள்ளது எனலாம்.
இந்த பகுதிகளில் அதிகமான இடங்களை பா.ஜ.க. கைப்பற்றி உள்ளது. பெங்களூரு நகர் மற்றும் பெங்களூரு புறநகர் மாவட்டங்களில் மொத்தம் 32 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பெங்களூரு மண்டலமான இந்த பகுதியிலும் பா.ஜ.க., ஜே.டி.எஸ். கட்சிகளை விட காங்கிரஸ் கட்சி தான் அதிக இடங்களை கைப்பற்றும் ஏற்கனவே கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன. அதன்படி காங்கிரஸ் அதிக இடங்களை பிடித்துள்ளது. ஹைதரபாத் கர்நாடகா மண்டலத்தில் மொத்தம் 31 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த மண்டலத்தில் தான் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவின் கலபுரகி மாவட்டம் உள்ளது. மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவர் ஆனதில் இருந்தே இந்த மண்டலம் காங்கிரஸ் வசம் ஆனது. பின்பு அவரது பிரசாரம், ராகுல், பிரியங்கா வருகை காங்கிரசின் செல்வாக்கை அதிகரித்தது.
மாறாக மத்திய கர்நாடகா மற்றும் கடலோர கர்நாடகா மண்டலங்கள் காங்கிரஸ், ஜே.டி.எஸ். கட்சியை விட பா.ஜ.க.வுக்கு அதிக தொகுதிகளை கொடுத்துள்ளன. அதன்படி மத்திய கர்நாடகா மண்டலத்தில் மொத்தம் உள்ள 35 சட்டசபை தொகுதிகளில் 20 தொகுதிகள் வரை பா.ஜ.க. கைப்பற்றி உள்ளது. கடலோர கர்நாடகா மண்டலத்தில் மொத்தம் 21 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பா.ஜ.க. செல்வாக்கு மிகுந்த இந்த தொகுதிகளும் காங்கிரஸ் பக்கம் மாறியுள்ளன. மும்பை கர்நாடகா என்பது மகாராஷ்டிரா மாநிலத்தை ஒட்டியுள்ள விஜயபுரம், பாகல்கோட் உள்ளிட்ட தொகுதிகளை உள்ளடக்கிய பகுதியாகும். மும்பை கர்நாடகா பகுதி பா.ஜ.க. வெற்றி பெறும் இடமாக இருந்து வந்தது, கடந்த தேர்தலிலும் அதே போலதான் நடந்தது.
கடந்த முறை கூட 44 சதவிகித வாக்குகளைப் பெற்று 30 இடங்களை அந்த பகுதியில் கைப்பற்றி இருந்தது பாஜக. அப்போது காங்கிரஸ் 17 இடங்களை மட்டுமே வென்றிருந்தது. இங்கு மொத்தம் 50 தொகுதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது கடந்த தேர்தலைவிட அதிகமான இடங்களை காங்கிரஸ் வென்றுள்ளது. பொதுவாக நகர்ப்புற தொகுதிகளில் பா.ஜ.க. அதிக பின்னடைவை சந்தித்துள்ளது. நகர்ப்புற மக்கள் மத்தியில் பா.ஜ.க. செல்வாக்கை இழந்திருப்பதே இதை காட்டுகிறது. என்றாலும் பா.ஜ.க.வுக்கு பலமான எதிர்க்கட்சி வாய்ப்பை கர்நாடக மக்கள் கொடுத்துள்ளனர்.