கேரளாவில் நடந்த கர்நாடகா தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் மயங்கி விழுந்து இறந்த காங்கிரஸ் தொண்டர்!!
கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இந்த வெற்றியை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். கேரள மாநிலம் இடுக்கி, வண்டி பெரியார் பகுதியில் உள்ள காங்கிரசார் நேற்று மாலை அந்த பகுதியில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில் இடுக்கி பகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவர்களில் காங்கிரசின் நீண்ட கால தொண்டர் செல்வகுமார் என்பவரும் இருந்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை அறிந்து செல்வகுமார் உணர்ச்சி பெருக்கில் காணப்பட்டார். அவரும் பட்டாசு வாங்கி வருவதாக கூறி கடைக்கு சென்றார்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவர் மார்பை பிடித்தபடி மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அறிந்ததும் உடன் இருந்த தொண்டர்கள் அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். இறந்துபோன செல்வகுமாருக்கு மனைவியும் ஒரு மகன், மகளும் உள்ளனர். தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் செல்வகுமார் இறந்தது காங்கிரசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.