இம்ரான்கான் வீடு திரும்பினார்: கைதுக்கு காரணம் ராணுவ தளபதி என பேட்டி!!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70), அல்காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் கடந்த 9-ந் தேதி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற வந்தபோது, அவரை அதே வழக்கில் துணை ராணுவத்தினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனால் பாகிஸ்தானில் பெரும் கலவரம் மூண்டது. பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. பலர் உயிரிழந்தனர். இது பதற்றமான சூழலை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இம்ரான்கான் முறையிட்டார். அவரது மனுவை 12-ந் தேதி தலைமை நீதிபதி உமர் அத்தா பந்தியல் அமர்வு விசாரித்தது. இம்ரான்கான் கைது சட்ட விரோதம் என அந்த அமர்வு அறிவித்தது.
மேலும் இம்ரான்கானை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஆஜராகுமாறு அறிவுறுத்தியது. அதன்பேரில் பலத்த பாதுகாப்புடன் இம்ரான்கான் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜரானார். அங்கு அவருக்கு அல்காதிர் அறக்கட்டனை ஊழல் வழக்கில் 2 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும், அந்த நாட்டில் அவர் மீதான எந்த வழக்கிலும் நாளை வரை (திங்கட்கிழமை) கைது செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து இம்ரான்கான், லாகூரில் உள்ள தனது வீட்டுக்கு நேற்று காலை திரும்பினார். அங்கு அவரை அவரது சகோதரிகளும், குடும்ப உறுப்பினர்களும் வரவேற்றனர். நலம் விசாரித்தனர். கட்சி தொண்டர்களும் கூடி வந்து மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். இம்ரான்கான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- என்னை கைது செய்ய விசாரணை அமைப்புகள் காரணம் இல்லை. ஒரே ஒருவர்தான் காரணம். அவர்தான் ராணுவ தளபதி. ராணுவத்தில் ஜனநாயகம் இல்லை. நான் ஆட்சிக்கு வந்துவிடுவேனோ என்று அவர் (ராணுவ தளபதி) கவலைப்படுகிறார். நான் அவரை கட்டம் கட்டுவேன். எனக்கு நடந்ததெல்லாம் அவரது நேரடி உத்தரவின்படி நடந்ததுதான். நான் வெற்றி பெற்றால் அவருக்கு கட்டம் கட்டி விடுவேன் என்று அவர் நம்புகிறார். கடந்த ஓராண்டில் எனது கட்சியினர் 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 கொலை முயற்சிகளில் நான் தப்பி இருக்கிறேன்.
நான் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது என்னை கைது செய்வதற்கு அவர்களிடம் எந்த நியாயமான காரணமும் இல்லை. நான் கடத்தப்பட்டேன். என்னை சிறைக்கு கொண்டு சென்ற பின்னர்தான் என்னிடம் அவர்கள் பிடிவாரண்டைக் காட்டினார்கள். இது காட்டு ராஜ்யத்தில் மட்டும்தான் நடைபெறும். சட்டம் எங்கே இருக்கிறது. போலீசார் எங்கே போனார்கள்? நாட்டில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டதுபோல இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.