எம்எல்ஏ-க்கள் கூட்டத்திற்கு 3 பேர் பார்வையாளர்கள் – காங்கிரஸ் அறிவிப்பு!!
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, கர்நாடக முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அடுத்த முதல்வர் யார் என்பது பற்றிய பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை கேட்டறிந்து கட்சி தலைமைக்கு அறிக்கை சமர்பிக்க மூன்று பேர் அடங்கிய பார்வையாளர்கள் குழு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதுபற்றிய அறிவிப்பில், மூத்த தலைவர் சுஷில் குமார் ஷிண்டே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜிதேந்திர சிங் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொது செயலாளர் தீபக் பபாரியா ஆகியோர் சட்டமன்ற கூட்டத்திற்கு பார்வையாளர்களாக செயல்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் புதிய அரசை அமைப்பது, அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி விவாதிக்கப்படுகிறது. முதல்வர் பதவி யாருக்கு என்ற விஷயத்தில் கடந்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் கர்நாடக மாநிலத்துக்கான காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் ஆகியோர் தங்களுக்கு ஆதரவாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினர்.