வடக்கு – கிழக்கு தமிழ் எம். பி களுடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு!!
வடக்கு – கிழக்குத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை மாலை நடக்க இருக்கின்றது.
கடந்த சனிக்கிழமை, அரசியல் தீர்வு தொடர்பாக ஆராய்வதற்கென ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த இந்தப் பேச்சு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் கொழும்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் இந்தச் சந்திப்பு இன்று திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுவதாக ஜனாதிபதி செயலகத்தால் அறிவிக்கப்பட்டது.
அதிகாரப் பகிர்வு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் இம்மாதம் 11, 12, 13 ஆகிய மூன்று தினங்களும் வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியும் சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
அதன் ஒரு படியாகக் கடந்த மே 9 ஆம் திகதி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பின் பின்னர் மே 11 ஆந் திகதி தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினைகள் தொடர்பாகவும், மறுநாள் 12 ஆந் திகதி அதிகாரப் பகிர்வு தொடர்பாகவும் பேசுவது என்று முடிவு செய்யப்பட்டது. அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுக்கள் முடிவடையாத பட்சத்தில் மே 13 மூன்றாவது நாளும் தொடர்ந்து பேசுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் மே 11 ஆந் திகதி, வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சின் போது, அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணி அபகரிப்பை நிறுத்துதல், காணாமற் போனோர் தொடர்பான விவகாரம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகிய ஐந்து விடயங்கள் குறித்து அங்கு ஆராயப்பட்டன. அந்தச் சந்திப்பில் முன்னேற்றகரமான தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை என்றாலும், காணி அபகரிப்பை நிறுத்துவது தொடர்பில் ஜனாதிபதி வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். ஏனைய விடயங்களில் இதற்கு முன்னர் நடந்த பேச்சுக்களில் கூறப்பட்டவையே மீண்டும் வலியுறுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அதிகாரப் பகிர்வு தொடர்பில் மறுநாள் ஆராயப்பட இருந்த சந்திப்புத் திடீரெனப் பிற்போடப்படுவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்தது. பிற்போடப்பட்ட பேச்சு இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறும். தீர்வு தொடர்பில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்தப்பேச்சு இடம்பெறும் தெரிவிக்கப்படுகிறது.