;
Athirady Tamil News

திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் திருக்கட்டமுது பெருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு !!

0

திருச்சி, திருகற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய சிவதலங்களை தரிசித்து விட்டு திருநாவுக்கரசர் (அப்பர்) காவிரியை கடந்து திருப்பைஞ்சீலியை நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அப்பர் பசியாலும், தாகத்தாலும் வருந்தினார். இதை அறிந்த சிவபெருமான் கோவிலுக்கு வரும் வழியில் ஒரு சோலையையும், குளத்தையும் உண்டாக்கினார் அப்போது, சோலையில் ஓய்வெடுத்த அப்பர் முன் அந்தணர் வேடத்தில் தோன்றிய சிவபெருமான், நானும் திருப்பைஞ்சீலி தான் செல்கிறேன் என்று அப்பரிடம் கூறி அவரை அழைத்து என்னிடம் கட்டுசோறு உள்ளது. அதை சாப்பிட்டு பசியாறி பிறகு செல்லலாம் என்று கூறினார்.

அதன்படி இருவரும் சாப்பிட்ட பின்னர் பொய்கையில் நீர் அருந்தி நடந்து சென்றனர். திருப்பைஞ்சீலியில் உள்ள சிவன் கோவிலுக்குள் சென்றதும் அந்தணராக வந்த சிவபெருமான் மாயமாகிவிட்டார். அப்போதுதான் இறைவனே அந்தணராக வேடமணிந்து வந்து தனக்கு உணவு அளித்ததை அப்பர் உணர்ந்துள்ளார். என் பசியும், தாகமும் தீர்க்க வந்தனையே என்று அப்பர் பெருமான் மெய்யுருக பதிகம் பாடினார். இந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கட்டமுதுபெருவிழா திருப்பைஞ்சீலியில் நடைபெறுவது வழக்கம்.இந்த நாளில் சிவனை வழிபட்டால் அன்ன தோஷங்கள் விலகும், வயிற்று நோய் குணமாகும் என்பதும் ஐதீகம். அதன்படி, இந்த ஆண்டு திருக்கட்டமுது பெருவிழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி காலை 9.15 மணிக்கு சாமி சோலையை நோக்கி புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து, திருநாவுக்கரசருக்கு திருக்கட்டமுது அளித்தல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு சிவனடியார்களுக்கு அன்னம் பாலிப்பும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாலை சோருடைய நாயகரும், அப்பர் சுவாமிகளும் திருப்பைஞ்சீலியில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றனர்.இரவு சாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து விசாலாட்சி சமேத நீலிவனேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அப்பர் சாமிகளுக்கு காட்சியளித்தார். அப்போது திருநாவுக்கரசர் தேவார பாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை பயபக்தியுடன் வணங்கினர்.

விழாவை முன்னிட்டு ஆறுநாட்டு வேளாளர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பாக அன்னதானம், நீர்மோர், பானகம் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் லெட்சுமணன் மேற்பார்வையில், கோவில் செயல் அலுவலர் மனோகரன் மற்றும் ஆறுநாட்டு வேளாளர் சங்க தலைவர் பி.செல்வராஜ், செயலாளர் சதீஸ்வரன், உபதலைவர் புரவி, பொருளாளர் டி. செந்தில்குமார் மற்றும் திருச்சி பத்மநாபன், கர்ணாமூர்த்தி, அம்பாள் பாலு மற்றும் ஆறுநாட்டு வேளாளர் அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், அதைத்தொடர்ந்து திருநாவுக்கரசர் குரு பூஜையும் நடைபெறுகிறது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. மதியம் ஒரு மணிக்கு மகேஸ்வர பூஜை மற்றும் அன்னம் பாலிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சிவனடியார்கள் மற்றும் ஓதுவார்கள் குழுவினரின் அருளுரை மற்றும் தேவார இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.