வங்காளதேசம்-மியான்மரை தாக்கிய மோக்கா புயலுக்கு 3 பேர் பலி- ஏராளமான வீடுகள் சேதம்!!
தென்கிழக்கு வங்ககடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக மாறியது. நேற்று பிற்பகல் மியான்மர் சிட்வே நகரம் மற்றும் வங்க தேசம் காக்ஸ்பஜார் இடையே மேக்கா புயல் கரையை கடந்தது. இதனால் கடலோர பகுதிகளில் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டி தீர்த்தது. இதனால் ஏராளமான மரங்கள் வேராடு சாய்ந்தது. வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தது. ரோடுகளில் ஆறு போல வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஆறுகளில் கரையே தெரியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக அப்பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். உயிருக்கு பயந்து அவர்கள் வீட்டின் மேற்கூரைகளிலும் கட்டிடங்களின் மேல் மாடியிலும் தஞ்சம் புகுந்தனர்.
சூறாவளி புயலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மரங்கள் மற்றும் மின்சார டிரான்ஸ் பார்மர்கள் சாய்ந்ததால் பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இணையதள சேவைகள் அனைத்தும் முடங்கியது. மியான்மர் கிழக்கு சான் மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி கணவன்- மனைவி பரிதாபமாக இறந்தனர். பியான்யோலாவின் நகரத்தில் மரம் விழுந்ததில் ஒருவர் உடல் நசுங்கி பலியானார். இந்த புயலுக்கு 700-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மோக்கா புயலால் கடலோரபகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
மேற்கு மியான்மர் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் கரையோரம் இருந்த குடிசைபகுதிக்குள் நீர் புகுந்தது. இதில் ஆயிரம் மக்கள் சிக்கி கொண்டனர். மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு சென்று அவர்களை மீட்டனர். கடல் நீர் புகுந்ததால் குடிசைகள் அனைத்தும் சேதம் அடைந்தது. வங்காளதேசம் காக்ஸ் பஜார் பகுதியில் உலகில் மிகப்பெரிய அளவிலான அகதிகள் முகாம் உள்ளது. ,இங்கு மூங்கில்களில் ஆன 1300 குடில்கள் உள்ளது. இதில் 3 லட்சம் மக்கள் தங்கி இருந்தனர். அவர்கள் புயல் தாக்குவதற்கு முன்பு அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று வங்கதேசத்தை புரட்டி போட்ட புயலுக்கு இந்த முகாமில் அமைக்கப்பட்டு இருந்த குடில்களும் தப்பவில்லை.
இந்த குடில்கள் அனைத்தும் கடுமையாக சேதம் அடைந்தது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இந்த பணியில் மீட்பு குழுவை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ள பொதுமக்களுக்கு தேவையான உணவு, மற்றும் குடிநீர், மருத்துவ உதவிகள் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் இறந்தவர்கள் பற்றிய முழு விவரமும் தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.