மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 5,800 பேர் மிசோரமில் தஞ்சம்!!
மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 5,800 பேர் அண்டை மாநிலமான மிசோரமில் தஞ்சமடைந்து உள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதே, குக்கி சமுதாய மக்களிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 3-ம் தேதி அந்த மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் இதுவரை 71 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் எரிக்கப்பட்டு உள்ளன. ராணுவம், துணை ராணுவம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் 45,000 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
மணிப்பூரில் மீண்டும் வாழ முடியாது என்ற சூழ்நிலையில் குக்கி, சின், மிசோ சமுதாயங்களை சேர்ந்த 5,822 பேர் மிசோரமில் தஞ்சமடைந்து உள்ளனர். தற்போது அவர்கள் மிசோரமின் 6 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரண முகாம்களில் உள்ளனர். மணிப்பூருக்கு திரும்பிச் செல்ல அவர்கள் மறுத்து வருகின்றனர்.
இந்த சூழலில் மணிப்பூரில் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி உள்ளிட்ட சமுதாய மக்களுக்காக தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று 10 எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் 7 பேர் ஆளும் பாஜகவை சேர்ந்தவர்கள் ஆவர்.
அமித் ஷாவுடன் சந்திப்பு
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் டெல்லியில் நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் முதல்வர் விளக்கம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் பிரேன் சிங், மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிவுரையின்படி மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக அமைதி நல்லிணக்க குழுக்கள் உருவாக்கப்படும். மாநில மக்கள் போராட்டங்களை கைவிட்டு அமைதி காக்க வேண்டுகிறேன். அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மணிப்பூரை பிரித்து புதிய மாநிலம் உருவாக்கும் கோரிக்கையை ஒருபோதும் ஏற்க முடியாது’’ என்று தெரிவித்தார்.
90 சிறாரை காப்பாற்றிய ஆசிரியை
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள லிமாகோங் பகுதியில் பழங்குடி மாணவ, மாணவியருக்கான உறைவிட பள்ளி செயல்படுகிறது. இங்கு குக்கி, நாகா உள்ளிட்ட பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.
கடந்த 3-ம் தேதி மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டபோது லிமாகோங் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேதே சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நகரில் குக்கி, நாகா சமுதாய மாணவ, மாணவியர் கல்வி பயில்வதால் மோசமான நிலைமை ஏற்பட்டது.
உறைவிட பள்ளியின் ஆசிரியை வனிலிம் ஆபத்தை உணர்ந்து சுமார் 90 மாணவ, மாணவிகளை அருகில் உள்ள வனப்பகுதிக்கு அழைத்து சென்றார். இதுகுறித்து வனிலிம் கூறியதாவது:
எங்கள் பள்ளியில் 6 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் விடுதியில் தங்கியிருந்து கல்வி பயில்கின்றனர். கலவரக்காரர்கள் பள்ளி மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்தது. எனவே அனைத்து குழந்தைகளையும் அருகில் உள்ள வனப்பகுதிக்கு அழைத்து சென்று பதுங்கி கொண்டோம். அன்றிரவு முழுவதும் விழித்திருந்து குழந்தைகளை பார்த்துக் கொண்டேன். மறுநாள் காலையில் ராணுவ வீரர்கள் வந்து எங்களை மீட்டனர். இவ்வாறு ஆசிரியை வனிலிம் தெரிவித்தார்.