இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்கு பெரும் அளவு பண உதவி செய்த பாகிஸ்தான் கும்பல்- கைதானவர் பரபரப்பு தகவல்!!
இந்தியா வழியாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக பெரும் அளவு போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க இந்திய கடற்படையும், மத்திய போதை பொருள் தடுப்பு துறையும் இணைந்து ஆபரேஷன் சமுத்திரகுப்த் என்ற பெயரில் தீவிர சோதனையில் இறங்கியது. இவர்கள், கொச்சி அருகே ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கு இடமாக ஒரு கப்பல் செல்வதை பார்த்தனர். அதனை நோக்கி விரைந்து சென்றபோது அந்த கப்பல் தண்ணீரில் மூழ்க தொடங்கியது.
இருப்பினும் இந்திய கடற்படையும், மத்திய போதை பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் கப்பலுக்கு சென்று பார்த்தபோது அங்கு போதை பொருள் இருப்பது தெரியவந்தது. அவர்கள் கப்பலில் கடத்தி வரப்பட்ட 2,500 கிலோ மெத்தாம்பெட்டமைன் என்ற போதை பொருளை கைப்பற்றினர். மேலும் கப்பலில் இருந்த பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரையும் பிடித்தனர். தொடர்ந்து அவரை கொச்சி அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவரது பெயர் சுபைர் என தெரியவந்தது. இவர்கள், ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் கொண்டு வந்ததாகவும், இந்திய அதிகாரிகளை கண்டதும் அதனை கடலில் மூழ்கடிப்பதற்காக கப்பலை சேதப்படுத்தி தண்ணீரில் மூழ்க செய்ததாகவும் தெரிவித்தார். மேலும் பல திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் இந்த போதை பொருள் தயாரித்து அங்கேயே பேக் செய்து வெளிநாடுகளுக்கு கடத்துவோம். தற்போது பாகிஸ்தானை சேர்ந்த கடத்தல் கும்பல் தலைவன் ஷாஜி சலீம் இந்த கடத்தலை தலைமை தாங்கி நடத்தி வருகிறார். இவர், பாகிஸ்தானிலேயே போதை பொருள்களை பாக்கெட்டுகளில் அடைத்து இலங்கை உள்பட பல நாடுகளுக்கு அனுப்பி வருகிறார். இந்த போதை கும்பல் இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்கு பெரும் அளவு பணம் உதவி செய்து வருவதாகவும் சுபைர் தெரிவித்துள்ளார். அவருடன் மேலும் சிலர் வந்ததாகவும், அவர்கள் படகுகளில் தப்பிச் சென்று விட்டதாகவும், சுபைர் கூறினார்.
போதை பொருள்கள் தண்ணீரில் நனையாமல் இருப்பதற்காக அனைத்து பாக்கெட்டுகளிலும் பிளாஸ்டிக் கவர் சுற்றப்பட்டிருப்பதாகவும் இந்திய அதிகாரிகள் அந்த பகுதியை விட்டு சென்ற பிறகு கடலில் மூழ்கடித்த போதை பொருள்களை மீட்கலாம் என திட்டமிட்டதாகவும் ஆனால் அதிகாரிகள் போதை பொருளை கைப்பற்றி விட்டனர் எனவும் தெரிவித்துள்ளார். அவர் கூறிய கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சுபைரை கைது செய்து எர்ணாகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்கு போதை கும்பல் பண உதவி செய்வதாக சுபைர் கூறி உள்ளதால் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளும் விசாரணை நடத்த உள்ளனர்.