திருமலை நாதநீராஞ்ச மண்டபத்தில் 2021-ம் ஆண்டு ஜூலை 25-ந்தேதி தொடங்கிய பாலகாண்ட பாராயணம் நிறைவடைந்தது!!
மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டி 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ந்தேதி திருமலையில் ஏழுமலையான் கோவில் எதிரே உள்ள நாத நீராஞ்சன மண்டபத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தால் பாலகாண்ட பாராயண நிகழ்ச்சி தொடங்கியது. அந்த நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது. புகழ்பெற்ற சமஸ்கிருத அறிஞரும், தேசிய சமஸ்கிருத பல்கலைகழகத்தின் பேராசிரியருமான பிரவா ராமகிருஷ்ண சோமயாஜி பங்கேற்று பாலகாண்டத்தில் உள்ள சுலோகங்களை விளக்க உதாரணங்களுடன் ஏறக்குறைய 2 ஆண்டுகளாக விளக்கி உலக பார்வையாளர்கள், பக்தர்களை வியக்க வைத்தார்.
பாலகாண்டத்தின் 77 அத்தியாயங்களில் இருந்து மொத்தம் 2,232 சுலோகங்கள் 649 நாட்கள் பாராயணம் செய்யப்பட்டதாக, திருமலை தர்மகிரி வேத விஞ்ஞான பீடத்தின் முதல்வர் குப்பா சிவசுப்பிரமணிய அவதானி கூறினார். அவர் மேலும் பேசியதாவது:- உலக நலன் கருதி திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் பாராயண யாகத்தின் ஒரு பகுதியாக மந்திரம் பாராயணம் தொடங்கியது. அதில் உள்ள ஒவ்வொரு வசனமும் ஒரு மந்திரம். பாலகாண்டத்தின் மொத்த 77 சர்க்கங்களில் 649 நாட்களுக்கு 2,232 சுலோகங்கள் சொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு வசனமும் அர்த்தத்துடன் உள்ளது. அதைச் சமுதாயத்துக்குப் பொருத்தி பண்டிதர்கள் கருத்துரை வழங்கி உள்ளனர்.
பேடி ஆஞ்சநேயர் சன்னதியில் ராம அவதாரமான வெங்கடேஸ்வரசாமி சன்னதியில் நாதநீராஞ்சன மண்டபத்தில் பாலகாண்ட பாராயணம் செய்வது மிகப் பெரிய விஷயம். வால்மீகி மகரிஷியிடம் ராம நாமஸ்மரணம் எங்கு நடந்தாலும் அங்கே அனுமன் இருப்பார். வால்மீகி மகரிஷி குருவாக மாறி ராமாயணத்தை உலகுக்கு வழங்கினார். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அறிஞர்கள் சேஷாச்சாரியுலு, மாருதி ஆகிேயார் மற்ற அறிஞர்களுடன் சேர்ந்து நேற்று 74-77 சர்க்கங்களில் இருந்து 166 சுலோகங்களை ஓதினார்கள். எஸ்.வி.இசை மற்றும் நடனக் கல்லூரியின் இசை விரிவுரையாளர் வந்தனா நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ராம ஜெயராம சிருங்கார ராமரை வழங்கினார். முடிவில் தனது குழுவினருடன் பஜரே ரகுவீரத்தை மெல்லிசையாக வழங்கினார்.
அதைத்தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) தர்மகிரி வேத விஞ்ஞான பீடத்தில் 67 அறிஞர்களுடன் சம்பூர்ண அகண்ட சுந்தர காண்ட பாராயணம் காலை 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரை தொடர்ந்து கிட்டத்தட்ட 18 மணி நேரம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சி எஸ்.வி.பி.சி. பக்தி சேனலில் தலைமை நிர்வாக அதிகாரி சண்முகக்குமார் மேற்பார்வையில் உலக பக்தர்களுக்காக நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. நாளை (புதன்கிழமை) காலை 7 மணியில் இருந்து காலை 8 மணி வரை அயோத்தியா காண்டம் நாத நீராஞ்சன மண்டபத்தில் நடக்கிறது. இதிகாசமான ராமாயணத்தின் இந்தப் பகுதியில் அதிகபட்ச சுலோகங்களின் எண்ணிக்கை 4308 ஆக உள்ளது.