வருமான வரி இணையத்தை முடக்கி ரூ.3½ கோடியை சுருட்டிய கம்ப்யூட்டர் என்ஜினீயர்!!
பெங்களூருவில் வருமான வரித்துறை இணையதளத்தை முடக்கி பல கோடி ரூபாயை மர்மநபர்கள் சுருட்டி இருப்பதாக சைபர் கிரைம் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து சி.ஐ.டி. போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சரத் சந்திரா உத்தரவிட்டு இருந்தார். அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் மர்மநபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில், மோசடியில் ஈடுபட்டதாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர், ஹாசன் மாவட்டம் இரேசாவே பகுதியை சேர்ந்த திலீப் ராஜுகவுடா (வயது 32) என்று தெரிந்தது. இவர், கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். வருமான வரித்துறையின் இணையதளமான ‘இ-பைலிங் போர்டல்’ என்ற இணையதளத்தை முடக்கி உள்ளார். பின்னர் வருமான வரி செலுத்துவோரின் பெயரில் போலி வங்கி கணக்கை தொடங்கி உள்ளார். அதாவது வருமான வரித்துறை இணையதளத்தை முடக்கி 6 நபர்களின் பெயரிலான பான் கார்டு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்டு, அந்த 6 நபர்களின் வங்கி கணக்குகளில் இருந்து போலியாக தொடங்கப்பட்ட வங்கி கணக்குக்கு பணத்தை மாற்றி இருக்கிறார்.
ஒட்டுமொத்தமாக 6 நபர்களின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.3.60 கோடியை திலீப் சுருட்டி இருந்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் வருமான வரித்துறை இணையதளத்தில் சில தவறுகள் இருப்பதால், அதனை சாதகமாக பயன்படுத்தி தான், முடக்கம் செய்து மோசடியில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இணையதளத்தில் இருக்கும் தவறுகள், தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு, சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.