முதல்-மந்திரி பதவி: சித்தராமையா, டி.கே.சிவக்குமாருடன் 90 நிமிடங்கள் நீடித்த ராகுல்காந்தியின் ஆலோசனை!!
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரி பதவியை பிடிப்பதில் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இருவரும் டெல்லி சென்றுள்ள நிலையில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் தனித்தனியாக சந்தித்தனர். இந்த சந்தர்ப்பத்தில் ராகுல்காந்தி மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டுக்கு வந்தார். அவர் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையாவிடம் முதல்-மந்திரி விவகாரம் குறித்து பேசி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் இருவரிடமும் தனித்தனியாகவும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரும் உடன் இருந்துள்ளனர். இந்த சந்திப்பு சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது. அதையடுத்து ராகுல் காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். அதையடுத்து கே.சி.வேணுகோபால் ராகுல்காந்தியை அவருடைய இல்லத்தில் தனியாக சந்தித்து கர்நாடக முதல்-மந்திரியாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பேசினார்.
இதற்கிடையே நேற்று இரவு சித்தராமையா திடீரென கே.சி.வேணுகோபால், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களின் வீடுகளுக்கு மாரத்தான் ஓட்டப்பந்தயம் போல் விறுவிறுவென காரில் சென்று அவர்களை சந்தித்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா நேற்று ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கர்நாடக முதல்-மந்திரி தேர்வில் ஓரளவுக்கு முடிவு எட்டப்பட்டு விட்டதாகவும், இறுதி முடிவை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசித்து இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பார்கள் என்றும் கூறினார்.