முதல்வர் பதவி கிடைக்காவிட்டால்..? கார்கேவிடம் டிகே சிவக்குமார் கூறிய தகவல்!!!
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, மாநிலத்தில் ஆட்சியமைக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வரை காங்கிரஸ் கட்சி மேலிடம் தேர்வு செய்யும் என்று கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது. இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர், முன்னாள் முதல்வர் சித்தராமையா நேற்று டெல்லி சென்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்வை சந்தித்து பேசினார். இவரைத் தொடர்ந்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் இன்று (மே 16) டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று மாலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை டிகே சிவக்குமார் சந்தித்து பேசினார்.
இருவரின் பேச்சுவார்த்தையின் போது, கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா என்று அவரிடம் யாரும் தெரவிக்கவில்லை என்றும், அடுத்த முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என்ற கருத்து டிகே சிவக்குமாரிடம் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘எனக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்றால், நான் சாதாரண சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்ற தயார். சித்தராமையா கட்சியில் இணைந்தது முதல், ஒன்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அல்லது முதலமைச்சர் என்று அதிகாரத்திலேயே இருந்து வந்துள்ளார்,’ என்று டிகே சிவக்குமார் மல்லிகார்ஜூன கார்கேவிடம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.