6 மாநிலங்களில் 100 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை!!
பஞ்சாப் மாநிலத்தில் பல பிரிவினைவாத அமைப்புகள் உள்ளன. அதில் எஸ்.எப்.ஜே. என்ற அமைப்பும் இருக்கிறது. இந்த அமைப்பு பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தது. இதனால் மத்திய அரசு அந்த அமைப்பை தடை செய்து இருந்தது. தடை செய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்பான எஸ்.எப்.ஜே.யின் தலைவராக குர்பத் சிங் உள்ளார். அவருக்கு மிகவும் நெருக்கமானவர் ஜஸ்விந்தர் சிங் முல்தானி. கடந்த ஆண்டு சண்டிகரில் உள்ள மாடல் புரைல் ஜெயில் அருகே நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவன். மேலும் லூதியானா கோர்ட்டில் நடந்த குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்டவன். மேலும் விவசாயிகள் போராட்டத்தின்போது விவசாயிகள் தலைவர் பல்வீர் சிங்கை கொல்லவும் சதி திட்டம் தீட்டியவன்.
ஜஸ்விந்தர் சிங்கை ஜெர்மனியில் வைத்து கைது செய்தனர். அவன் மீது பயங்கரவாதத்தில் ஈடுபட்டது, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட 5 வழக்குகள் இருக்கிறது. ஜஸ்விந்தர் சிங்கும் அவனது கூட்டாளிகளும் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு நிதியுதவி அளித்து பயங்கரவாதத்தை பரப்பி வந்தனர். இந்த நிலையில் ஜஸ்விந்தர் சிங்கின் கூட்டாளிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மத்தியபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.