எடியூரப்பாவை ஓரங்கட்டியது ஏன் என்பதை பா.ஜனதா கூற வேண்டும்: ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி!!
தார்வார்-உப்பள்ளி மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகதீஷ் ஷெட்டர். இவர் தனக்கு பா.ஜனதா டிக்கெட் கொடுக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். தார்வார்-உப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய அவர் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் பெங்களூருவில் ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:- லிங்காயத் தலைவரான எடியூரப்பா கடந்த பா.ஜனதா ஆட்சியில் முதல்-மந்திரியாக பதவி வகித்தார். ஆனால் அவரை வலுக்கட்டாயப்படுத்தி பா.ஜனதா பதவி விலக வைத்தது. மேலும் அவரை அக்கட்சி ஓரங்கட்டியது. எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகியது ஏன் என்பதை உயர்மட்ட குழு கூற வேண்டும். நான் காங்கிரசில் இணைந்ததால் தான் வடகர்நாடகத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
இந்த தேர்தலில் லிங்காயத் சமுதாய மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கினர். தம்மய்யா, லட்சுமண் சவதி உள்பட பல லிங்காயத் தலைவர்களை பா.ஜனதா மதிக்கவில்லை. அவர்களை யாரும் சமாதானப்படுத்தவில்லை. பா.ஜனதா மீதான நம்பிக்கையை லிங்காயத் மக்கள் இழந்துவிட்டனர். பி.எல்.சந்தோஷ் பா.ஜனதா தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறார். இதனால் என்னை ஓரங்கட்டினர். தற்போது என்னை குறிவைத்து பா.ஜனதாவினர் தோற்கடித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.