குடிபழக்கத்தை கண்டித்ததால் மனைவியை கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை!!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சஞ்சீவி ரெட்டி நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 40). கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி பிரேமலதா (35). இவர்களுக்கு கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடந்து. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். ஜனார்த்தனன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து சித்ரவதை செய்து வந்தார். குடிப்பழக்கத்தை கைவிடுமாறு பிரேமலதா கணவரிடம் வற்புறுத்தினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரேமலதா அவரது பெற்றோருக்கு திருமண நாள் என்பதால் தும்குண்டா, மல்கஜகிரியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். பின்னர் இரவு வீட்டிற்கு திரும்பினார். அப்போது மது போதையில் இருந்த ஜனார்த்தனனுக்கும் பிரேமலதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜனார்த்தனன் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து பிரேமலதாவை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த பிரேமலதா ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தார்.
பின்னர் ஜனார்த்தனனும் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலை அவர்களின் பிள்ளைகள் தாய், தந்தை இறந்து கிடந்ததை கண்டு கதறி துடித்தனர். அவர்களது சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இது குறித்து எஸ்.ஆர். நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்களின் மகன், மகள் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.