கட்சி தலைவருக்கு முதல்-மந்திரி பதவி: டி.கே.சிவக்குமாருக்கு பரமேஸ்வர் திடீர் ஆதரவு !!
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி எழுந்துள்ளது. சித்தராமையா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலரை டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளார். தனக்கு கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதால் முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான பரமேஸ்வர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “எனக்கு முதல்-மந்திரி பதவி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். என்னாலும் 50 எம்.எல்.ஏ.க்களை டெல்லிக்கு அழைத்து செல்ல முடியும்.
ஆனால் கட்சி கட்டுப்பாட்டை நான் மீற மாட்டேன். கட்சியின் முடிவை நான் ஏற்பேன். பொதுவாக எங்கள் கட்சியில் மாநில தலைவராக இருப்பவருக்கு தான் முதல்-மந்திரி பதவி வழங்குவது சம்பிரதாயம். இது தான் எனது கருத்து” என்றார். பரமேஸ்வருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் துமகூருவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பரமேஸ்வர் காங்கிரஸ் மாநில தலைவராக நீண்ட காலம் பணியாற்றியதாகவும், அவர் துணை முதல்-மந்திரியாக இருந்தபோது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார் என்றும் அவர்கள் கூறினர்.