வேலை தேட உதவும் லின்க்டுஇன் நிறுவனத்திலேயே 700 பேர் பணிநீக்கம்!!
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் லின்க்டுஇன் தளம் மக்கள் வேலை தேட உதவி வருகிறது. மற்றவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்க உதவும் லின்க்டுஇன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். இந்த முறை விற்பனை, நிர்வாகம் மற்றும் சப்போர்ட் குழுக்களை சேர்ந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். முன்னதாக பிப்ரவரி மாதத்தில் லின்க்டுஇன் நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பணியமர்த்தும் குழுவை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டனர். லின்க்டுஇன் நிறுவனத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த இரண்டு காலாண்டுகளாக வருவாய் அதிகரித்து வரும் நிலையிலும், லின்க்டுஇன் நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையில் மும்முரம் காட்டி வருகிறது.
பணிநீக்க நடவடிக்கை மூலம் நிறுவனத்தின் நிர்வாக சீர்திருத்தம் செய்து, ஊழியர்கள் படிநிலையை குறைத்து அதிவேகமாக முடிவுகளை எடுக்க உதவும் என்று லின்க்டுஇன் தலைமை செயல் அதிகாரி ரியான் ரோஸ்லன்ஸ்கி தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்து இருக்கிறார், என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. லின்க்டுஇன் நிறுவனத்தில் புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், பணிநீக்க நடவடிக்கை மூலம் பாதிக்கப்படுவோர் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.