11 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்குகிறது வோடபோன்!!
வோடபோன் நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் 11 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கப்போவதாக அறிவித்து உள்ளது. இங்கிலாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வோடபோன் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் 11,000 பேரை வேலையை விட்டு நீக்க திட்டமிட்டுள்ளது. வோடபோன் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்ட மார்கெரிட்டா டெல்லா வாலே இதைப்பற்றி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,’ எங்கள் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை. வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவையை வழங்க வோடபோன் மாற வேண்டும். அப்போதுதான் போட்டித்தன்மையை உருவாக்க முடியும். வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் சேவையை வழங்க முடியும்’ என்று தெரிவித்தார். வோடபோன் நிறுவனத்தில் தற்போது உலகம் முழுவதும் 1,04,000 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதில் 11,000 பேரை நீக்கினால் அது 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இந்தியாவில் 500 பேரை நீக்கியது அமேசான்
அமேசான் நிறுவனம் இந்தியாவில் 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இணையப்பணி, மனித வள மேம்பாட்டு சேவை உள்ளிட்ட துறைகளில் இந்த பணி நீக்கம் நடந்துள்ளது. அமேசானில் கடந்த மார்ச் மாதம் சிஇஓ ஆண்டி ஜாசியால் அறிவிக்கப்பட்ட உலக அளவிலான பணி நீக்கம் என்று கூறப்படுகிறது. உலகம் முழுவதும் அமேசானில் 9000 பேர் இதுவரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த அறிவிப்பின்படி இன்னும் 9 ஆயிரம் பேரை நீக்க வேண்டிய நிலையில் அமேசான் உள்ளது.