நடுவானில் ஓங்கி ஒலித்த தமிழ்!!
சென்னை-மதுரை செல்லும் விமானத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு, விமானி ஒருவர் தமிழில் கவிதை வாசித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த மே 14ஆம் திகதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சென்னை – மதுரை செல்லும் விமானத்தில், அன்னையர் தினத்தன்று விமானி ஒருவர் தாய்மார்களை வாழ்த்தி கவிதை வாசித்த காணொளி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரியா விக்னேஷ் என்ற இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழில், அழகாக அறிவிப்புகளை வழங்கிய காணொளி வைரலாகி அப்போது பிரபலமாக அறியப்பட்டவர்.
கடந்த மே 14ஆம் திகதி அன்னையர் தினத்தை முன்னிட்டு, மதுரை- சென்னை செல்லும் இண்டிகோ விமானம் புறப்பட தயாராகும் முன்பு, விமானி ராம் தீப் ‘எல்லோருக்கும் பணிவான வணக்கங்கள், அன்னையர் தினத்தை போற்றும் வகையில் நமது விமானி கவிதை வாசிக்கவுள்ளார்’ என அறிவித்தார்.
இதனை தொடர்ந்து பிரியா விக்னேஷ் புன்னகையுடன், தாய்மார்களை போற்றும் வகையில் கவிதை வாசித்தார். அவர் கவிதை வாசிக்கும் போது பயணிகள் அனைவரும் ஆர்வமாக காணொளி எடுத்தனர். கவிதை வாசித்து முடித்ததும், பயணிகள் அனைவரும் கரகோசம் எழுப்பி அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
அப்போது எடுக்கப்பட்ட காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த காணொளியை பிரியா விக்னேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது 81,000 பேருக்கு மேல் அந்த காணொளியை பார்த்துள்ளார். அந்த காணொளி பதிவின் பின்னோட்டத்தில் ‘அருமையான கவிதை’, மற்றொருவர் ‘தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துக்கள்’ என பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் இண்டிகோ நிறுவனம் இந்த காணொளியை தனது அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து‘தனது தாயை பற்றி எங்கள் விமானியின் அருமையான கவிதையால், பயணிகள் மனமுருகி விட்டனர்’ என பதிவிட்டுள்ளனர்.