மதுப்பிரியர்களுக்காக அரசிடம் கோரிக்கை !!
மதுபானத்தின் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து மதுக் கொள்வனவு வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே இதைக் கருத்தில் கொண்டு சாமான்ய மக்கள் மலிவு விலையில் மதுவைக் கொள்வனவு செய்ய அனுமதிக்குமாறு நாட்டின் முன்னணி மது உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த வாரம் நிதியமைச்சு, இலங்கை மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் நாட்டின் முன்னணி மது உற்பத்தியாளர்களுக்கிடையில் நடைபெற்ற சந்திப்பின் போது குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அரசாங்கம் மதுபானத்தின் வரியை அதிகரித்ததன் விளைவாக உள்ளுர் மதுபானங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமது மொத்த விற்பனை சுமார் 40% ஆல் குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் நிதியமைச்சரிடம் தெரிவித்தனர்.
மிகவும் மலிவு விலையிலிருந்த, நுகர்வோர் மத்தியில் பிரபலமாக அறியப்பட்ட ‘கள்’ அல்லது ‘கள் சாராயம்’ எனப்படும் மதுபான வகையானது, அரசாங்கத்தின் அனைத்து வரிகளுக்கும் உட்பட்டு தற்போது 750 மில்லி லீற்றர் போத்தல் ரூ.3000 இற்கு விற்கப்படுகிறது. அதனுடைய கால்பங்கின் விலை ரூ.750 ஆகும்.
சாதாரண மக்கள் அல்லது தினக்கூலி பெறும் மக்களால் எவ்வாறு ரூ. 750 கொடுத்து மதுபானத்தை வாங்க முடியும். இதனால் அவர்கள் ஆரோக்கியமற்ற ஆபத்தான மற்றும் சட்டவிரோதமான கசிப்பு போன்ற மலிவான மாற்றுகளை நாடுவார்கள்.
எனவே நுகர்வோர் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் மலிவு விலையில் மதுபானத்தை அறிமுகம் செய்ய தமக்கு அனுமதியளிக்குமாறு உற்பத்தியாளர்கள், நிதி இராஜாங்க அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.