ரஷ்ய டாங்கிகளை வெடிகுண்டுகளை ஏந்தி செல்லும் டிரோன்கள் மூலம் தகர்க்கும் திட்டத்தில் உக்ரைன் வீரர்கள்!!!
உக்ரைன் கிழக்கு மற்றும் தெற்கு எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய டாங்கிகளை வெடிகுண்டுகளை ஏந்தி செல்லும் டிரோன்கள் மூலம் தகர்க்கும் திட்டத்தில் உக்ரைன் வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், ரஷ்ய டாங்கிகளை தகர்க்கும் திட்டத்தை உக்ரைன் வீரர்கள் வகுத்து வருகின்றனர். சக்திமிக்க வெடிபொருட்களை டிரோன்களில் வைத்து ரஷ்ய டாங்கிகளை குறிவைத்து தாக்கும் திட்டத்தை அவர்கள் தொடங்கி உள்ளனர்.
அதிநவீன தொழில்நுட்பத்தை நம்பாமல் பொதுமக்கள் பயன்படுத்தும் டிரோன்களை சோதனைக்கு உட்படுத்தும் பணியில் உக்ரைன் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு சென்று உக்ரைனுக்கு அதன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆதரவு திரட்டினார். இந்த பயணத்தின்போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்துப் பேசினார்.
அப்போது உக்ரைனுக்கு ஏவுகணைகள், டிரோன்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதாக ரிஷி சுனக் உறுதியளித்ததாக ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ஜெலன்ஸ்கி,”ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் மூலம் உக்ரைன் மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பும், அரசியல் ஆதரவும் கிடைத்துள்ளது,” என தெரிவித்தார்.