புதிய திட்டங்களை அறிவித்தார் ஜனாதிபதி!!
முடங்கிப் போன பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள இலக்குகளுக்கு மேலான இலக்குகளையும் குறுகிய காலத்தில் அடைந்துகொள்ள முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (17) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்குச் தள்ளப்பட்டமை மற்றும் தங்களது எதிர்காலம் தொடர்பில் இளையவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசியல்வாதிகள் தொடக்கம் அரசாங்க அதிகாரிகள் வரையில் அனைவரும் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த ஜனாதிபதி சகலரும் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தால் கடந்த கால தவறுகளை திருத்திக்கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.
நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமாயின் சில அரச நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டியது அவசியமென வலியுறுத்திய ஜனாதிபதி, மக்கள் பணம் வீணடிக்கப்படுவதை தவிர்க்க வேண்டுமெனில் அமைச்சரவை செயலாளர்கள் அமைச்சுகளுக்கு கீழுள்ள நிறுவனங்களை பாதுகாப்பதற்கு மாறாக அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மாகாண சபைகளின் முதலீட்டுச் செலவுகள் மற்றும் மூலதனத் திட்டங்கள் தொடர்பில் புதிய சட்டதிட்டங்களை கொண்டுவர வேண்டியது அவசியமெனவும், கீழ் மட்டம் வரையில் அதிகாரங்களை பகிர்வது தொடர்பில் அடுத்த இரு வாரங்களுக்குள் தீர்மானம் எட்டப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்ட மும்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் அமைச்சுகளின் செயலாளர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டதோடு, அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு, அரச சேவை முகாமைத்துவம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தில் வேலைத்திட்டம் தொடர்பிலான பரிந்துரைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2023 ஆம் ஆண்டிற்காக வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட, கொள்கை ரீதியான மாற்றங்களுக்கு அவசியமான சட்டத் திருத்தங்கள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள சட்டத்திருந்தங்கள் பற்றியும் இங்கு தீர்க்கமாக ஆராயப்பட்டன.