புதிய முதல்-மந்திரி தேர்வில் இழுபறி: காங்கிரஸ் தலைவர்கள் 4-வது நாளாக ஆலோசனை!!
கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள போதிலும் முதல்-மந்திரி பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறது. கடந்த 13-ந்தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில் முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து யாரை முதல்-மந்திரியாக தேர்வு செய்வது என்பது குறித்து புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் எழுத்து பூர்வமாக கருத்து கேட்கப்பட்டது. அவை அனைத்தும் டெல்லி கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரையும் காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு வரவழைத்தது.
நேற்று அவர்கள் இருவரையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது வீட்டுக்கு வர வழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரிடமும் பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார். முதல்-மந்திரி பதவியை முதல் 2 ஆண்டுகள் ஒருவரும், மீதமுள்ள 3 ஆண்டுகளை மற்றொருவரும் ஏற்கும் வகையில் செயல்படலாம் என்று கூறினார். இதை இருவரும் ஏற்க மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து சித்தராமையா முதல்-மந்திரியாகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்-மந்திரியாகவும் பொறுப்பு ஏற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக மறுத்து விட்டார். கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் சித்தராமையாதான் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று எழுதி கொடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
அதன்பேரில் கார்கே, ராகுல் காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் சித்தராமையாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். ஆனால் சோனியா, பிரியங்கா ஆகியோர் டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை அறிந்ததும் கார்கேவும் தனது நிலையை மாற்றிக்கொண்டு டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக பேசி வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் கர்நாடகா மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், அகில இந்திய பொதுச்செயலாளர்களில் ஒருவருமான ரன்தீப்சுர்ஜிவாலாவும் டி.கே.சிவகுமாருக்கு ஆதரவு தெரிவித்து இருந்ததாக தெரியவந்துள்ளது. சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரில் யார் முதல்-மந்திரியாக தேர்வு பெறுவது என்ற விவகாரம் கர்நாடகா மாநில காங்கிரசை இரண்டு கோஷ்டிகளாக பிளவுபடுத்தி இருக்கிறது. அதன் எதிரொலி டெல்லி காங்கிரசிலும் கேட்க தொடங்கி உள்ளது.
டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்களும் இந்த விவகாரத்தில் இரு பிரிவாக பிரிந்துள்ளனர். பெரும்பாலான மூத்த தலைவர்கள் சித்தராமையாவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். கர்நாடகா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்களின் விருப்பபடி சித்தராமையாவை முதல்-மந்திரியாக தேர்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். டி.கே.சிவகுமார் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் அது எதிர்காலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி விடக்கூடும் என்று அந்த காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். என்றாலும் சோனியா, பிரியங்கா இருவரது ஆதரவும் இருப்பதால் டி.கே.சிவகுமார் தனது நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறார்.
மாநில காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் தேர்தலில் வெற்றி பெற வைத்து இருப்பதால் தனக்கே முதல்-மந்திரி பதவி தரப்பட வேண்டும் என்று டி.கே.சிவகுமார் தொடர்ந்து பிடிவாதமாக வலியுறுத்தி வருகிறார். தனது பிடிவாதத்தால் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை நீடிக்கிறது. சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரும் விட்டுக்கொடுக்க மறுப்பதால் 4 நாட்களாக புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நீடிக்கிறது. புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்யும் பொறுப்பை காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் கார்கேவிடம் ஒப்படைத்து இருந்தனர். ஆனால் அவரால் இறுதி முடிவு எடுத்து செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரது பேச்சை டி.கே.சிவகுமார் மற்றும் கர்நாடகா மாநில தலைவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.
இதையடுத்து இன்று (புதன்கிழமை) 4-வது நாளாக டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இன்று காலை ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுத்தே தீர வேண்டும் என்று உறுதியான நிலைப்பாட்டுடன் களத்தில் இறங்கினார். தன்னை வந்து சந்திக்கும்படி சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவருக்கும் அழைப்பு விடுத்தார். அதன்படி 11.30 மணிக்கு சித்தராமையா ராகுலை சந்தித்து பேசினார். கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு தனது பங்களிப்பை அப்போது அவர் விளக்கி கூறினார். ராகுல் தெரிவித்த சில திட்டங்களை ஏற்றுக்கொண்டு சித்தராமையா முதல்-மந்திரி பதவியை தனக்கே தர வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரை தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு ராகுல் காந்தியை டி.கே.சிவகுமார் வந்து சந்தித்தார்.
75 வயதாகும் சித்தராமையா ஏற்கனவே 5 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் இருந்து விட்டார். எனவே காங்கிரசை வெற்றி பெற வைத்த தனக்கே முதல்-மந்திரி பதவி தர வேண்டும் என்று தெரிவித்தார். இரு தரப்பினரின் கருத்துக்களை கேட்ட ராகுல் காந்தி அடுத்தகட்டமாக சோனியா, கார்கேவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பிறகு கர்நாடகா புதிய முதல்-மந்திரி யார் என்பதில் தீர்வு ஏற்படும் என்று தெரிகிறது. வெற்றி பெற்று 4 நாட்கள் ஆன பிறகும் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய முடியாததால் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது.