இந்திய பொருளாதார வளர்ச்சி 2024ம் ஆண்டு 6.7% உயரும்: ஐநா கணிப்பு!!
அடுத்தாண்டு இந்திய பொருளாதாரம் 6.7 சதவீதம் உயரும் என ஐநா தெரிவித்துள்ளது. உலக பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புக்கள் குறித்து ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2023 ம் ஆண்டின் மத்தியில் உலக பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் அடிப்படையில் தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் பொருளாதாரம் 5.8 சதவீதமாகவும் அடுத்த காலண்டர் ஆண்டில் 6.7 சதவீதமாகவும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வெளிநாடுகளில் தேவை குறைவு ஆகியவை தான் இந்தாண்டின் முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றை தீர்மானிக்கும். இந்தியாவில் இந்தாண்டு பண வீக்கம் 5.5 சதவீதமாக குறையும். கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட முதன்மை அறிக்கையில், அதிக வட்டி விகிதங்கள் மற்றும் உலகளாகவிய பொருளாதார மந்தநிலை முதலீடு மற்றும் ஏற்றுமதியை தீர்மானிப்பதால் 2023ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி) 5.8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளின் பொருளாதாரம் சவாலானதாக உள்ளதாக இருந்தாலும், இந்தியாவின் பொருளாதாரம் வலுவானதாக உள்ளது. 2024ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 6.7 சதவீத வளர்ச்சி அடையும் என கூறப்பட்டுள்ளது. ஐநா சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறையின் தலைவர் ஹமீத் ரஷீத் கூறுகையில்,‘‘ உலக பொருளாதாரத்தில் இந்தியா பிரகாசமான இடமாக உள்ளது.ஜனவரியில் இருந்து இந்தியாவிற்கான எங்கள் கணிப்பு மாறவில்லை,பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளது உள்பட பல சாதகமான அம்சங்களை காண்கிறோம்’’ என்றார்.