அமெரிக்க அதிபரின் திடீர் முடிவால் குவாட் தலைவர்கள் உச்சிமாநாடு ரத்து: ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு!!
ஆஸ்திரேலியாவில் அடுத்த வாரம் நடைபெற இருந்த குவாட் தலைவர்கள் உச்சிமாநாடு திடீரென ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அடுத்த வாரம் குவாட் தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெற இருந்தது. இந்நிலையில் அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகின்றது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூகினியா பயணத்தை ஒத்திவைப்பதாக அதிபர் ஜோபைடன் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதன் எதிரொலியாக அடுத்த வாரம் சிட்னியில் நடைபெற இருந்த குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டை ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். நியூ சவுத் வேல்சில் நிருபர்களை சந்தித்த பிரதமர் அல்பானீஸ்,‘‘அடுத்த வாரம் சிட்டினியில் குவாட் தலைவர்கள் உச்சிமாநாடு நடைபெறாது. அது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் ஜப்பானில் இந்த வார இறுதியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் சந்திக்க உள்ளோம். ஜப்பானில் குவாட் தலைவர்களிடையே விவாதத்தை நடத்துவோம்” என்றார்.