;
Athirady Tamil News

மது கொடுத்து கொல்லச் சொன்னார் நான் கொன்றேன்!!

0

அவர் எனக்கு மதுபானப் போத்தல் ஒன்றைத் தந்து எனது கணவனைக் கொல்ல சொன்னார். அதனால் நான் அவரைக் கொன்றேன்” என முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் தனது தகாத உறவு மனைவியுடன் இணைந்து அவரின் கணவனைப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் இரண்டு பிள்ளைகளின் தந்தை நேற்று (17) மொரவக்க நீதவான் துமிந்த பஸ்நாயக்க முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள் என நீதவான் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊறுபொக்க தொலமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதான ஜினதாஸ என்பவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். 33 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் அவரின் கொலைச் சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைக்கு சந்தேக நபருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதே குறித்த சந்தேக நபரால் இந்த உண்மைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பில் மொறவக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 69 வயதான இரு பிள்ளைகளின் தந்தையும் 83 வயதான பெண்ணும் நேற்று (18) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இது தொடர்பில் நீதவான் சந்தேக நபரிடம் வினவிய போது “ அவரால் தான் இந்தக் கொலையை செய்தேன். அவர் எனக்குக் குடிக்க கொடுத்து அவரைக் கொல்லச் சொன்னார். பின்பு புதைக்க வேண்டிய இடத்தையும் அவரே காட்டினார்” என தெரிவித்தார்.

இது தொடர்பில் மொறவக்க பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், கொலை செய்யப்பட்ட ஜினதாசவின் மூத்த மகனும் மே மாதம் 11 ஆம் திகதி குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

உயிரிழந்த நபரான ஜினதாச புதைக்கப்பட்ட இடத்திற்கு கடந்த 15 ஆம் திகதி ஆய்விற்காக சென்ற போது, அவ்விடத்தில் கழிவறை கட்டப்பட்டிருந்ததுடன் அதை உடைத்து தோண்டிய போது சுமார் 9 அடி ஆழத்திலிருந்து உடல் உறுப்புகள் கிடைத்ததாக பொலிஸாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

புதைக்கப்பட்ட இடத்திலிருந்த உடல் உறுப்புகள் மற்றும் பொருட்கள், ​​ தனது கணவருடையது என சந்தேகநபர் அடையாளப்படுத்தியதாகவும், தனது கணவரை கொன்று புதைத்ததாக கூறி அவர் கதறி அழுததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிமன்றம் சந்தேகநபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் வழக்கை அன்றைய தினம் வரை ஒத்திவைத்தது.

69 வயதான எஸ். சோமதாச என்ற இரு பிள்ளைகளின் தந்தை மற்றும் அவருடன் தகாத உறவில் இருந்த பெண்ணான 83 வயதான றோசலின் என்ற இருவருமே இவ்வாறு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.