மின்சாரக் கட்டணத்தை 27 வீதத்தால் குறைக்க முடியும்!!
மின்சாரக் கட்டணத்தை 27 வீதத்தால் குறைக்கும் சாத்தியம் காணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தினார்.
ஆனால் இலங்கை மின்சார சபை உண்மைச் செலவுத் தரவுகளை மறைத்து மின் கட்டணத்தை 3 வீதத்தால் குறைக்கும் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது. உண்மையான செலவுக் குறைப்புடன் ஒப்பிடும் போது மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கு சரியான தரவுகளை சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனகரத்நாயக்க தெரிவித்தார்.
´இந்த ஆண்டு பெப்ரவரி மாதம், போலியான தரவுகளைக் காண்பித்து 66 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. உண்மையில் அப்போது, 35 சதவீதம் மட்டுமே கட்டணத்தை உயர்த்தியிருக்க வேண்டும். அன்று, இலங்கை மின்சார சபையினால் மதிப்பிடப்பட்ட மின்சாரத் தேவையானது, 16,550 ஜிகாவாட்.
இந்த ஆண்டு மின்சாரத் தேவை 15,050 ஜிகாவாட் மணி நேரமாக மட்டுமே இருக்கும் என்பது எமது மதிப்பீடாக இருந்தது. ஏப்ரல் மாதம், எமது மதிப்பீடு சரியானது மற்றும் அவர்களின் மின்சார சபையின் தேவை அதிகமாக மதிப்பிடப்பட்டது.
அதன்படி,எதிர்வரும் ஆண்டுக்கான தேவை 15,264 ஜிகாவாட் மணி நேரமாக இருக்கும் என்று மின்சார சபை எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தனர்.
ஆணைக்குழுவின் மதிப்பீட்டின்படி மின்சாரக் கட்டணங்களை நிர்ணயித்து அமுல்படுத்தியிருந்தால் இன்று மின்சார பாவனையாளர்கள் எதிர்நோக்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது என்றும் ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டுகின்றார்.
´மின் தேவையை ஒப்பிடுவதற்கு முதல், மின்சாரம் வழங்குவதற்கான செலவையும் மின்சார சபை குறைக்க வேண்டும். மின்சார சபை 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 392 பில்லியன் ரூபா செலவாகும் என ஆரம்பத்தில் மதிப்பிட்டுள்ளது.
ஆனால் அடுத்த 6 மாதங்களுக்கு 285 பில்லியன் ரூபா செலவிடப்படும் என மின்சாரசபை கூறியது. ஆனால் எமது கணக்கீட்டின்படி மின்சார விநியோகத்திற்கான உண்மையான செலவு 107 பில்லியன் ரூபாவால் குறைக்கப்படும். இவ்வாறு இருக்கும் போது, எதிர்வரும் காலக்கட்டத்தில் ஒட்டு மொத்தமாக 27 சதவீதமாவது மின்கட்டணத்தை குறைக்க வேண்டும்.
இல்லையெனில்,போலியான தரவுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர் குழுக்களுக்கு மட்டும் 3 சதவீதம் கட்டணத்தை குறைப்பதன் மூலம், அனைத்து மின் நுகர்வோருக்கும் நீதி கிடைக்காது.
மேலும், மின்சார சபைக்கு எதிர்பார்த்த வருமான அதிகர்ப்பும் ஏற்படாது´ என்றார்.
மின்சார கட்டண திருத்தத்தில், இலங்கை மின்சார சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கட்டண முறையின் (சமன்பாடு) படி முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த முறையின்படி, மின்சாரம் வழங்குவதற்கான நியாயமான செலவை மட்டுமே மின்சார நுகர்வோரிடமிருந்து வசூலிக்க முடியும்.
எவ்வாறாயினும், மின்சார நுகர்வோர்களிடம் இருந்து மின்சார சபை பெற்ற கடனை மீளப்பெறுவதற்கான முன்மொழிவுகளை உள்ளடக்கி அங்கீகரிக்கப்பட்ட முறைக்கு பதிலாக இம்முறையும் கட்டண திருத்த யோசனையை நடைமுறைப்படுத்த முயற்சிப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
´மின்சார கட்டண முறையின் படி, அனைத்து தரவுகளும் சரியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
வாடிக்கையாளரிடமிருந்து பெறக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட செலவுகள் மட்டுமே மொத்த செலவில் சேர்க்கப்படும். ஆனால் அங்கீகரிக்கப்பட்ட முறையின் கீழ் சமர்ப்பிக்க வேண்டிய தரவுகளுடன் இந்த முன் மொழிவு சமர்ப்பிக்கப்படவில்லை. செலவின் அடிப்படையில் கட்டணங்களை கணக்கிடுவதில், உண்மையான மற்றும் குறைந்தபட்ச செலவை மீட்டெடுக்கும் வகையில் கட்டணங்கள் சரிசெய்யப்பட வேண்டும். உதாரணமாக ஒரு லீற்றர் நெப்தா எண்ணெயின் சந்தை விலை 220 ரூபாவாக இருந்தாலும் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட நெப்தா எண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 266 ரூபாவாக கணக்கிடப்பட்டுள்ளது.
அதாவது அங்கு உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் ஒரு அலகுக்கான விலை 69 ரூபா 53 சதம். மேலும், இந்த மின்னுற்பத்தி நிலையத்தில் டீசல் மூலம் உருவாக்கினால், யூனிட் விலை 68 ரூபா14 சதமாக குறையும். ஆனால் மின்னுற்பத்தி நிலையத்திற்கான மதிப்பீடு நெப்தாவைப் பயன்படுத்துவதன் அடிப்படையில் உள்ளது. இவ்வாறு அதிக செலவின் அடிப்படையில் மின் கட்டணத்தை கணக்கிடுவது மின்சார சட்டத்திற்கு எதிரானது. இந்த குழப்பமான தரவு குறித்த சரியான தகவல் இதுவே என இலங்கை மின்சார சபைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை விரைவாக செயற்படுத்துவதற்கு ஆற்றல் வழங்கல் பாரிய பங்காற்ற முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேலும் சுட்டிக்காட்டினார்.
´எரிபொருள். மின்சாரத்திற்காக அதிக சுமை சுமக்க நேரிட்டால், அது சாதாரண நுகர்வோர் மட்டுமின்றி தொழிலதிபரையும் பாதிக்கிறது. எரிபொருள் விலை உயர்வால் எரிபொருள் தேவை குறைந்துள்ளது. அதிகமின் கட்டணத்தால் மின் தேவை குறைந்துள்ளது. எரிசக்தி நியாயமான விலையில் வழங்கப்படவேண்டும் மற்றும் பொருளாதாரத்திற்கு வரம்பற்ற ஆற்றலை வழங்க வேண்டும். விலையை நியாயமாக குறைக்க வேண்டும். அதை உடனடியாக செய்ய வேண்டும். உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ளது.
கடந்த ஆண்டை விட மாற்று விகிதம் சிறப்பாக உள்ளது. அதற்கு பதில் நியாயமான முறையில் மக்களுக்கு நிவாரணம் வழங்க வாய்ப்பு கிடைத்துள்ளதால், உண்மையான செலவின் அடிப்படையில் எரிசக்தி விலை குறைக்கப்பட வேண்டும்.
மின்சார சபை முன் வைத்துள்ள கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பான தேவையான தகவல்களைசமர்ப்பித்த பின்னர், கட்டண திருத்த முன்மொழிவு குறித்து பொது கலந்தாய்வு நடத்தி மக்களின் கருத்துகளின் அடிப்படையில் இறுதி முடிவை எடுக்க திட்டமிட்டுள்ளோம்.