இந்திய அரசியலையே திரும்பி பார்க்க வைத்த டி.கே.எஸ்.!!
கர்நாடக காங்கிரசில் வலிமை மிக்க தலைவராக திகழ்பவர் டி.கே.சிவக்குமார். இந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இவர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார். இவர் 1962-ம் ஆண்டு மே 15-ந்தேதி கனகபுராவில் தொட்டலஹல்லி கெம்பே கவுடா, கவுரம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். கர்நாடகாவில் 2-வது பெரும்பான்மை சமூகமான ஒக்கலிகா கவுடாவை சேர்ந்த இவர் 1980-களில் மாணவர் பருவத்தில் காங்கிரசில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கினார். தமது 27 வயதில் 1989-ல் மைசூரு மாவட்டத்தின் சாத்தனூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
பின்னர் 1994, 1999, 2004 தேர்தல்களிலும் சாத்தனூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக வாகை சூடினார். 2008, 2013, 2018 மற்றும் தற்போதைய தேர்தல்களில் கனகபுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி அடைந்து இருக்கிறார். கனகபுராவில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றவர் டி.கே.சிவகுக்மார். காங்கிரஸ் மேலிடத்தின் மிகுந்த நம்பிக்கைக்குரிய இவர் மாநிலங்களில் காங்கிரசுக்கு ஏதேனும் சிக்கல் என்றால் பா.ஜ.க.வை எதிர்த்து களம் இறங்குவது வழக்கம். 2002-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் விலாஸ்ராவ் தேஷ்முக் அரசுக்கு சிக்கல் ஏற்பட்ட போது எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டில் தங்க வைத்து அரசாங்கத்தை காப்பாற்றிய பணியில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.
2017-ம் ஆண்டு குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலின் போதும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைப் பாதுகாத்தவர் டி.கே. சிவக்குமார். கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்க்கப்பட்ட போது எம்.எல்.ஏக்களுக்காக மும்பையில் வீதியில் இறங்கி மல்லுக்கட்டியவர் இவர். அடுத்தடுத்த வழக்குகள், விசாரணைகள் என பாஜக அரசு அலைக்கழித்த போது ஒட்டுமொத்த ஒக்கலிகா கவுடா ஜாதியினரும் பெங்களூரு நகரை முற்றுகையிட்டு பிரம்மாண்டமாக நடத்திய பேரணி மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. 2020-ம் ஆண்டு முதல் கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்த முறை முதல்-மந்திரி பதவிக்காக முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டு முட்டுக்கட்டையாக நிற்காமல் விலகிக் கொண்டு துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த 5 நாட்களாக இந்திய அரசியலையே திரும்பி பார்க்க வைத்த இவருக்கு துணை முதல்வர் பதவியோடு 2 முக்கிய துறைகள் வழங்கப்பட உள்ளது. இதில் ஒன்று மின்சாரத்துறை. 2-வது துறை நீர்ப்பாசனத்துறையாகும். கர்நாடகாவில் 2013-2018 முதல் டி.கே. சிவக்குமார் மின்சாரத்துறையை நிர்வகித்தார். அதன்பிறகு 2018 ல் அமைந்த காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சி கூட்டணியில் டி.கே. சிவக்குமார் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்தார். இந்த முறையும் இந்த 2 துறையை அவர் நிர்வகிக்க வாய்ப்புள்ளது.