ஜல்லிக்கட்டுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்டத்துறை அமைச்சர் கருத்து!!
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இயற்றுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவித்தபிறகு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அத்துடன் பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்தது. கர்நாடகாவில் நடத்தப்படும் கம்பாலா, மகாராஷ்டிராவில் நடத்தப்படும் மாட்டு வண்டி பந்தயம் ஆகியவற்றுக்கு எதிரான மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பையடுத்து தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தமிழ்நாடு அரசு சிறந்த வழக்கறிஞர்களை வைத்து சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுள்ளதாகவும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். ஜல்லிக்கட்டுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. தமிழர்களின் பண்பாட்டில் இருந்து ஜல்லிக்கட்டை பிரிக்க முடியாது என்ற தமிழ்நாடு அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் அமைச்சர் ரகுபதி கூறினார்.