;
Athirady Tamil News

இடிந்து விழும் அபாயத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற கட்டிடம்! !

0

பிரிட்டன் நாடாளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் மறுசீரமைப்புத் திட்டம் தாமதமானால், 147 ஆண்டுகள் பழமையான அந்த வளாகம் இடிந்து விழுந்து பேரழிவு ஏற்படலாம் என்று அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த எச்சரிக்கையை அந்நாட்டின் நாடாளுமன்ற குழு வெளிப்படுத்தியுள்ளது.

கட்டிடக் கலையில் சிறந்த படைப்பாக கருதப்படும் இந்த வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையானது, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக விளங்குகிறது.

அந்நாட்டின் நாடாளுமன்றமாக செயல்படக்கூடிய இந்த கட்டிடம், மிகவும் சிதைவடைந்து கல்நார் படிந்துள்ளதால் இப்போது ஆபத்தில் உள்ளதாகவும், கட்டிடத்தில் பல ஆபத்துகள் இருப்பதாகவும் நாடாளுமன்ற குழு கூறி உள்ளது.

இதுபற்றி பிரிட்டன் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையைச் சரிசெய்து மீட்டெடுக்க வேண்டும் என்று ஒருமித்த கருத்து நிலவினாலும், பல்வேறு காரணங்களால் சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இன்றுவரை, கட்டிடத்தைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களைவிட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதே கவனம் செலுத்தப்படுகிறது.

நாடாளுமன்றம் இருக்கும் அரண்மனையைச் சீரமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து 5 ஆண்டுகள் ஆகிறது.

ஆனால், இன்னும் என்னென்ன சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டும் என்று கூட முடிவெடுக்கவில்லை. பணிகளை முடிப்பதற்கான காலக்கெடு மற்றும் செலவும் முடிவு செய்யப்படவில்லை.

சீரமைப்பு பணிகளை மேலும் தாமதம் செய்தால் செலவு அதிகமாகும். அது வரி செலுத்துவோருக்கே கூடுதல் சுமையாகும். அரண்மனையில் சிறிய அளவிலான சீரமைப்பு பணிகளுக்காக பிரிட்டன் நாடாளுமன்றம் ஒரு வாரத்திற்கு 2 மில்லியன் பவுண்டுகள் (ரூ. 20,56,92,200) செலவு செய்கிறது.

ஆனாலும், சுகாதாரம், பாதுகாப்பு பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. எனவே இந்த பிரச்சினையில் நாம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கட்டிடத்தை பாதுகாக்க வேண்டும்.” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.